Skip to content
Home » விபத்தில் இறந்த திருச்சி இன்ஸ்பெக்டர் உடலை நடுரோட்டில் தடுத்து நிறுத்திய அப்பல்லோ ஊழியர்கள்

விபத்தில் இறந்த திருச்சி இன்ஸ்பெக்டர் உடலை நடுரோட்டில் தடுத்து நிறுத்திய அப்பல்லோ ஊழியர்கள்

  • by Senthil

திருச்சி திருவெறும்பூர்  போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் பிரியா(45). இவர்  கடந்த 7ம் தேதி இரவு பணி முடிந்து  தனது சொந்த ஊரான புதுக்கோட்டை அருகே உள்ள கிராமத்திற்கு புறப்பட்டார். இதற்காக  புதுக்கோட்டைக்கு பஸ்சில் சென்றார். அங்கிருந்து அவரது கணவர் பைக்கில் அழைத்து சென்றார்.

அப்போது அந்த  சாலையில் புதிதாக ஸ்பீடு பிரேக்கர் அமைத்துள்ளனர். இதை  பிரியாவின் கணவர் கவனிக்காமல் வேகமாக சென்று உள்ளார். அப்போது  பின்னால் இருந்த இன்ஸ்பெக்டர் பிரியா தூக்கி வீசப்பட்டு பின்னந்தலையில் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை  திருச்சியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

2 நாட்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் இன்று காலை  பிரியாவுக்கு மூளை சாவு ஏற்பட்டது. மதியம் 1 மணி அளவில் அவர் உயிர் பிரிந்தது. அவர் 2 நாட்கள் இன்சூரன்ஸ் மூலம் சிகிச்சை பெற்றார்.   பிரியா மரணம் அடைந்ததை தொடர்ந்து இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு தெரிவிக்கப்பட்டது.  மொத்தம் 3 லட்சத்துக்கு மேல்  மருத்துவ செலவு ஆனதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே  அரசு ஊழியர் என்பதாலும், விபத்து என்பதாலும்  பிரியாவின் உடல்  உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு  தனியார் ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து  செல்லப்பட்டது.  மதியம் 1.30 மணி அளவில் உடல் பால்பண்ணை ரவுண்டானா அருகே வந்தபோது  வேறு ஒரு வாகனத்தில் வந்த  அப்பல்லோ மருத்துவமனை ஊழியர்கள் 4 பேர்  பிரியாவின் சடலம் கொண்டு சென்ற ஆம்புலன்சை  தடுத்து நிறுத்தி ஆஸ்பத்திரிக்கு பணம் கட்டாமல் எப்படி உடலை எடுத்து செல்கிறீர்கள் என தடுத்து நிறுத்தினர்.

இதனால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.  இன்ஸ்சூரன்ஸ் நிறுவனம் பணத்தை செலுத்திவிட்டது என  பிரியாவின் கணவர் கூறினார். ஆனால் எங்கள் கணக்கில் அந்த பணம் வரவு ஆகவில்லை. எனவே பணத்தை கட்டிவிட்டு உடலை எடுத்து செல்லுங்கள் என்றனர். இதனால்  நடுரோட்டில் பிரச்னை பெரிதாகிகொண்டே இருந்தது.

இதைப்பார்த்து பயந்த ஆம்புலன்ஸ் டிரைவர் , ஐயா பாடியை இறக்கி வைத்து விட்டு நான் போகிறேன். என்னை விட்டு விடுங்கள் என்றார். இதற்கிடையே திருவெறும்பூர் போலீசார் வந்து மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசி பார்த்தனர். அதற்கும் நிர்வாகம்  கேட்கவில்லை. இதற்கிடையே பிரியாவின் உறவினர்கள் பலர்  திரண்டு வந்து  உடலை நாங்கள் எடுத்து செல்வோம். முடிந்ததை பாா்த்துக்கொள் என்று   உடலைவ அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று விட்டனர்.

இந்த களேபரம்  சுமார் 15 நிமிடங்கள் நடந்தது. அதன்பிறகு இன்சூரன்ஸ் பணமும்  மருத்துவமனை கணக்கில் வரவு வந்து விட்டதாக மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

விபத்தல் இறந்த இன்ஸ்பெக்டர் பிரியர் 2004ல் நேரடி எஸ்ஐயாக தேர்வு செய்யப்பட்டார்.  கடந்த பிப்ரவரி 12ம் தேதி தான் திருவெறும்பூருக்கு மாறுதல் ஆகி வந்தார்.  இவரது கணவர் டாஸ்மாக் சூப்பர்வைசராக இருக்கிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!