பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரின் மகனான அர்ஜுன் தெண்டுல்கர், மும்பை அணியில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் கோவா அணிக்கு மாறினார். மும்பை மற்றும் கோவா அணிகளுக்காக இதுவரை 7 டெஸ்ட் ஏ, 9 20 ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த நிலையில் இந்த வருடம் ரஞ்சி கோப்பையில் அறிமுகமாகியுள்ளார் அர்ஜுன் தெண்டுல்கர். கோவா – போர்வோரிமில் நடைபெற்று வரும் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கோவா அணி முதலில் பேட்டிங் செய்கிறது. முதல் நாளன்று கோவா அணி 5 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்தது. பிரபுதேசாய் 81, அர்ஜுன் தெண்டுல்கர் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இந்நிலையில் இரு வீரர்களும் இன்று சிறப்பாக விளையாடி சதம் அடித்துள்ளார்கள். 23 வயது அர்ஜுன் தெண்டுல்கர் தனது அறிமுக ரஞ்சி போட்டியிலேயே 177 பந்துகளில் சதமடித்து அசத்தி உள்ளார். சச்சின் தெண்டுல்கர் தனது அறிமுக ரஞ்சி ஆட்டத்தில் சதமடித்தது போல அர்ஜுனும் சதமடித்துள்ளார். கோவா அணி 140 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 410 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. பிரபுதேசாய் 172, அர்ஜுன் தெண்டுல்கர் 112 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்கள்.