சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து மண்டல பூஜை, மகரவிளக்கு தரிசனத்துக்காக லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள். இதற்காக கார்த்திகை மாதம் 1-ந்தேதி மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டி மலையேறிச்சென்று அய்யப்பனை பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.
இதில் மண்டல பூஜை தரிசனத்துக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் 41 நாட்களும், மகரவிளக்கு தரிசனத்திற்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் 60 நாட்களும் விரதம் கடைப்பிடிப்பது வழக்கம். அதன்படி இன்று கார்த்திகை மாதம் பிறந்ததால், அய்யப்ப பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
திருச்சி ஐயப்பன் கோயில், மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் ஐயப்ப பக்தர்கள் இன்று காலை மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். இதுபோல கும்பகோணம், கரூர், மயிலாடுதுறை, தஞ்சை சென்னை மகாலிங்கபுரம், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பூர் ஈஸ்வரன் கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள முருகன், சிவன், அம்மன் கோவில்களிலும் சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.