Skip to content
Home » கொரோனா…. மாரடைப்பு ஆபத்து அதிகரிப்பு…. நிபுணர் எச்சரிக்கை

கொரோனா…. மாரடைப்பு ஆபத்து அதிகரிப்பு…. நிபுணர் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடங்கி 4 ஆண்டுகளாகியும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. புதிது புதிதாக உருமாறிய வைரஸ்கள் தோன்றிப் பரவி வருகின்றன.இந்த நிலையில, கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடர்பாக தேசிய தொற்று நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் ஆலோசகர் டாக்டர் நரேஷ் புரோகித் கூறி இருப்பதாவது:

சமீபத்திய உலகளாவிய அறிவியல் ஆராய்ச்சிகள், கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால், இதய நோய்கள் அதிகரிக்கிற ஆபத்து இருப்பதாக கூறுகின்றன.கொரோனாவால் ரத்தம் உறைகிற போக்கு அதிகரிக்கிறது. இது மாரடைப்பு ஆபத்தை கூட்டுகிறது.

நாட்டில் கடந்த 2 மாதங்களாக இதயம் செயலிழந்துபோவதால் திடீர் திடீரென ஏற்படுகிற இறப்புகள் அதிகரித்து இருக்கின்றன.இதில் இரண்டு வகையான இறப்புகள் நேரிடுகின்றன. ஒன்று, கடுமையான மாரடைப்பால் மரணம் நேருகிறது. குறிப்பாக சற்று வயதானவர்கள், பாரம்பரிய இதய நோய் ஆபத்து காரணி கொண்டவர்கள். அடுத்து மாரடைப்பின்றி, வேறு காரணங்களால் மரணம் ஏற்படுகிறது. இதயநோய் ஆபத்து காரணிகள் இல்லாமல் ஆரோக்கியமான நபர்களில் அரிதான நிகழ்வுகளாக இந்த மரணம் நேருகிறது.

முதல் பிரச்சினையை இ.சி.ஜி., 2டி எக்கோ மற்றும் டி.எம்.டி. போன்ற பாரம்பரிய தடுப்பு இதய சோதனைகள் மூலம் கண்டறிய முடியும். இரண்டாவது பிரச்சினையைக் கண்டறிய நீண்ட கால இ.சி.ஜி. கண்காணிப்பு, மின் இயற்பியல் சோதனை மற்றும் மரபணு சோதனை போன்ற பல்வேறு கண்டறிதல் வழிமுறைகள் தேவைப்படுகின்றன.

முன் எச்சரிக்கை நடவடிக்கைகளாக 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை மற்றும் உண்ணாவிரத கொழுப்பு சோதனையை மேற்கொள்ள வேண்டும். 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் எலக்ட்ரோ கார்டியோகிராம், எக்கோ கார்டியோகிராம் மற்றும் ‘டிரெட்மில்’ சோதனை உள்பட வருடாந்திர இதய பரிசோதனை செய்ய வேண்டும்.இளைஞர்கள் அதிரடியாக பழக்கம் இல்லாத உடற்பயிற்சிகளில் தீவிரமாக இறங்குவதற்கு தேவையில்லை. ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். உடற்பயிற்சிகளை வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். உடல் எடையை பராமரித்து வரவேண்டும்.

தினமும் 6 முதல் 8 மணி நேரம் உறங்க வேண்டும்.யாருக்கேனும் அதிக மன அழுத்தம், நீரிழிவு, அதிகளவில் கொழுப்பு இருந்தால் அவற்றைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார். கொரோனா தொற்றுக்கு பின்னர் மாரடைப்பு, இதயநோயால் இளைஞர்களில் சம்பவிக்கிற மரணம் தொடர்பாக ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கு சுகாதாரத்துறை அமைச்சகம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், மக்களிடையே பீதியைக் குறைப்பதற்கு ஒவ்வொரு திடீர் மரணம் தொடர்பாகவும் குழு அமைத்து ஆராய வேண்டும் என்றும் டாக்டர் நரேஷ் புரோகித் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!