Skip to content
Home » பரபரப்பான ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி …

பரபரப்பான ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி …

வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்நாட்டுடன் ஒருநாள், டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரில் 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் வங்காளதேசம் கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றது. இதனை தொடர்ந்து 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கடந்த 22-ம் தேதி தொடங்கியது. இதில், முதலில் ஆடிய வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா 314 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடந்து 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வங்காளதேசத்தின் லிண்டன் தாஸ் அதிகபட்சமாக 73 ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் அக்சர் பட்டேல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து, 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. சுக்மன் கில், கேஎல் ராகுல் துவக்க வீரர்களாக களமிறங்கினர். ஆனால், இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. 2 ரன்கள் எடுத்திருந்த கேஎல் ராகுல், ஷகீப் வீசிய பந்தில் கேட்ச் மூலம் அவுட் ஆனார். அடுத்து வந்த புஜாரா 7 ரன்னில் ஸ்டெப்ம்பிங் முறையில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதனால், 12 ரன்னில் 2 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியது. அடுத்து அக்சர் பட்டேல் களமிறங்கினார். அதேவேளை, 7 ரன்கள் எடுத்திருந்த துவக்க வீரர் சுக்மன் கில்லும் ஸ்டெம்பிங் முறையில் அவுட் ஆனார். இதனால், 29 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்தது தடுமாறியது. அடுத்து வந்த விராட் கோலி 1 ரன் எடுத்த நிலையில் முகைதி ஹசன் மிர்சா பந்து வீச்சில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இதனால், இந்திய அணி 37 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. வெற்றிக்கு 100 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கைவசம் 6 விக்கெட்டுகளுடன் இந்திய அணி இன்று களம் இறங்கியது. ஆனால் இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளிக்கும் வகையில் அக்சர் படேல் 34 ரன்னிலும், உனத்கட் 13 ரன்னிலும், அடுத்து வந்த ரிஷப் பண்ட் 9 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தனர். இதனால் இந்திய அணி 74 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்நிலையில் 8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்ரேயஸ் அய்யர் , அஷ்வின் இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். வங்கதேச அணியின் வெற்றிக்கு இன்னும் 3 விக்கெட்டுகளே தேவப்படும் நிலையில் ஆட்டம் பரபரப்பான நிலையை எட்டியது. ஆனால் இந்த இணை மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டதோடு அணியை சரிவில் இருந்து மீட்டனர். அதிரடியாக ஆடிய அஷ்வின் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சருடன் 42 ரன்கள் குவித்தார். மற்றொரு பேட்ஸ்மேன் ஸ்ரேயஸ் அய்யர் 29 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இந்திய அணி 47 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி பதிலடி கொடுத்துள்ளது.இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணி அடுத்ததாக டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட தொடரை உள்நாட்டில் ஆடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!