Skip to content
Home » ஆஸ்திரேலியாவுக்கு என்னாச்சு? 2 போட்டியிலும் மோசமான தோல்வி…. தெ.ஆ. சூப்பர்

ஆஸ்திரேலியாவுக்கு என்னாச்சு? 2 போட்டியிலும் மோசமான தோல்வி…. தெ.ஆ. சூப்பர்

 ஐசிசி உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நேற்று லக்னோவில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா, தென்ஆப்ரிக்கா மோதியது. டாஸ் வென்ற ஆஸி பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் பொறுமையுடன் விளையாடி முதல் விக்கெட்டுக்கு 108 ரன் சேர்த்தனர். கேப்டன் டெம்பா பவுமா 35ரன் எடுத்திருந்த போது 19.4 ஓவரில் மேக்ஸ்வெல் வெளியேற்றினார். அதே நேரத்தில் மறுமுனையில் ஸ்கோரை உயர்த்துவதில் டி காக் கண்ணும் கருத்துமாக இருந்தார்.

கடந்த ஆட்டத்தில் சதம் விளாசிய வாண்டர் டுசன் 26 ரன்னிலும், மார்க்ரம் 56ரன்னிலும் வெளியேறினர். இடையில் பொறுப்பாக விளையாடிக் கொண்டிருந்த டி காக் இந்த ஆட்டத்திலும் சதத்தை விளாசி 109 ரன்னில் மேக்ஸ்வெல் பந்தில் போல்டானார். அதன் பிறகு வந்த கிளாஸ்ஸன் 19, மில்லர் 17, மார்கோ 26 ரன் எடுத்திருந்த போது ஆஸி வீரர்கள் பெவிலியனுக்கு அனுப்பி வைத்தனர். யாரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழக்கவில்லை. அதனால் தெ.ஆ 50ஓவர் முடிவில் 7விக்கெட் இழப்புக்கு 311ரன் குவித்தது. ரபாடா, கேசவ் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் நின்றனர்.

ஆஸி தரப்பில் மேக்ஸ்வெல், ஸ்டார்க் தலா 2, கம்மின்ஸ், ஸம்பா, ஹசல்வுட் ஆகியோர் ஒரு விக்கெட் வீழ்த்தினர். அதனையடுத்து 312 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா 40.5 ஓவரில் 177 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக லபுஷேன் 46 ரன் எடுத்தார். தென் ஆப்ரிக்கா தரப்பில் ரபாடா 3, மகாராஜ், ஷம்ஸி, ஜான்சன் தலா 2, நிகிடி ஒரு விக்கெட் வீழ்த்தினர். முதல் லீக் போட்டியில் இந்தியாவிடம் தோற்ற ஆஸ்திரேலியா 2வது போட்டியிலும் தோற்றுள்ளது. ஒரு நாள் உலக கோப்பை  போட்டியில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா இந்த உலக கோப்பை போட்டி தொடரில் முதல் இரண்டு  போட்டிகளிலும் மோசமான தோல்வி அடைந்ததை பார்த்து ரசிகர்களே அதிர்ச்சி அடைந்து உள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு என்னாச்சு? என்ற கேள்வி அனைத்து ரசிர்கள் மனதிலும் எழுந்துள்ளது.  அதே நேரத்தில் முதல் 2 ஆட்டங்களிலும் அதிக ரன்கள் சேர்த்து அபார வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா ரன் ரேட்டில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது.சர்வதேச ஒருநாள் ஆட்டங்களில் அதிவேகமாக 2000 ரன்னை கடந்த வீரர்கள் பட்டியலில் வாண்டர் டுசன்(45இன்னிங்ஸ்) 5வது இடத்தை பிடித்தார். முதல் 4 இடங்களில் ஹசிம் அம்லா(40, தெ.ஆ), ஜாகீர் அப்பாஸ்(45, பாக்), கெவின் பீட்டர்சன்(45, இங்கி), பாபர் அஸம்(45, பாக்) ஆகியோர் உள்ளனர். அடுத்து 6வது இடத்தில் இமாம் உல் ஹக்(46, பாக்) இருக்கிறார்.

 

உலக கோப்பையில் அதிக சதம் விளாசிய விக்கெட் கீப்பர்கள் வரிசையில் நேற்று டி காக் இணைந்தார். இந்தப் பட்டியலில் சங்கக்காரா 5 சதங்களும், டி வில்லியர், பிரெண்டன் டெய்லர், டி காக் ஆகியோர் தலா 2சதமும் விளாசியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!