தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் மாமன்னர் இராஜராஜ சோழனுக்கு பிரம்மாண்டமான வெண்கலச் சிலை அமைக்கக் கோரி, அகில இந்திய கோழியர் ராஜ்ஜியம் மாநிலத் தலைவர் ஆனந்தராஜ் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பியுள்ள மனுவின் விவரம்: “தமிழர் வரலாற்றின் பொற்காலமாகத் திகழ்ந்த சோழப் பேரரசை உலகறியச் செய்த மாமன்னர் இராஜராஜ சோழன் எ கோழியர் புகழையும், நிர்வாகத் திறனையும், கலை மற்றும் கட்டிடக்கலைப் பங்களிப்பையும் போற்றும் வகையில் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் அவருக்குத் திருவுருவச் சிலை அமைக்க வேண்டும் என்ற தமிழ் மக்களின் நீண்டநாள் விருப்பத்தினைத் தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
உலகப் பாரம்பரியச் சின்னமான தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டி, கடல் கடந்து தமிழரின் பெருமையை நிலைநாட்டிய மாமன்னர் இராஜராஜ சோழனுக்குத் தஞ்சாவூரில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழ்நாட்டின் தலைநகரமும், உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் அறிஞர்கள் வந்து செல்லும் முக்கிய மையமுமான சென்னை மாநகரில் (குறிப்பாக மெரினா கடற்கரை அல்லது முக்கியப் பொது இடத்தில்) மாமன்னர் இராஜராஜ சோழனுக்குப் பிரம்மாண்டமான வெண்கலச் சிலை அமைப்பது தமிழர்களின் வரலாற்றுப் பெருமைக்கு மேலும் வலுசேர்க்கும்.
எனவே, முதலமைச்சர் இக்கோரிக்கையினைப் பரிசீலித்து, சென்னையில் மாமன்னர் இராஜராஜ சோழனுக்கு திருவுருவச் சிலை அமைத்திட உரிய நடவடிக்கை எடுக்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
