சாகுபடி இழப்பீடு வழங்க வேண்டும்; மேகதாது அணை கட்டப்பட்டால் தற்கொலைதான் தீர்வு – அய்யாக்கண்ணு பேட்டி.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் பல்வேறு விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் திரளாகக் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு கூறியதாவது:-
உச்சநீதிமன்ற உத்தரவின்படி கர்நாடக அரசு காவிரியில் மாதந்தோறும் தண்ணீர் திறந்துவிட வேண்டும். ஆனால், கர்நாடக அரசு தண்ணீரை தேக்கி வைக்காமல், நூற்றுக்கும் மேற்பட்ட சக்திவாய்ந்த மோட்டார்கள் மூலம் நீரை மேடான பகுதிகளுக்குத் திருப்பிவிட்டு, ஏரிகளுக்கு அனுப்பி தமிழ்நாட்டின் உரிமையைப் பறிக்கிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70 அடிக்கு கீழே சரிந்துள்ளது. இன்னும் ஐந்தே நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் சூழலில், விவசாயிகள் எப்படி சாகுபடி செய்ய முடியும்? குருவை மற்றும் சம்பா சாகுபடிகள் முற்றிலும் பொய்த்துப் போய்விட்டன. வறட்சி என்று அறிவிக்க மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது. ஆனால், தற்போது சாகுபடியே செய்ய முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளதால், திருச்சி மற்றும் திருவெறும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்கக் கோரி ஆர்.டி.ஓ அதிகாரியிடம் வலியுறுத்தியுள்ளோம்.
விவசாயிகளிடம் மிகக் குறைந்த விலைக்குப் பொருட்களை வாங்கும் இடைத்தரகர்கள், பலமடங்கு அதிக விலைக்கு விற்கின்றனர். நாங்களே நேரடியாகக் குறைவான விலைக்கு விற்க முயன்றாலும் கார்ப்பரேஷன் அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் தடுத்து தொந்தரவு செய்கிறார்கள்; விவசாயிகளை வாழவிடாமல் செய்வதற்கு இதுவே உதாரணம். ஒருபுறம் அடுத்த மாதம் மேகதாது அணைக்கு அடிக்கல் நாட்டப் போவதாகக் கூறுகிறார்கள். ஏற்கனவே காவிரி நீரின்றி வறண்டுள்ள நிலையில், மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகம் முற்றிலும் பாலைவனமாகிவிடும். இதனைத் தடுத்து நிறுத்த அனுமதி மறுக்கப்பட்டால், டெல்லிக்குச் சென்று விவசாயிகள் அனைவரும் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை. திருச்சி கார்ப்பரேஷன் அலுவலகத்தில் ஜே.இ-யாக பணியாற்றும் கணேஷ் பாபு என்பவர் அலுவலகத்திற்கு வருவதில்லை; பொதுமக்களின் குறைகளைக் கேட்பதுமில்லை, தொலைபேசி அழைப்புகளையும் ஏற்பதுமில்லை. எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி நாளை மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்க உள்ளோம் என்றார்.
