கரூர் மாவட்டத்தில் ரூ.500 கோடி தடுப்பணை உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் – சட்டமன்ற அரசு உறுதிமொழிக் குழுவினர் நேரில் ஆய்வு.
கரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
குறிப்பாக, நஞ்சைப் புகலூர் பகுதியில் சுமார் ரூ.500 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தடுப்பணைப் பணிகளை குழுவினர் ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து, அமராவதி

ஆற்றின் இடதுகரை வாய்க்கால் பணிகள், கோழியின ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையக் கட்டிடம், ஆவின் பால்பண்ணை ஆகிய இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்டு வரும் புதிய திருமண மண்டபம், சுற்றுலா, பண்பாடு மற்றும்

அறநிலையத்துறை சார்ந்த புதிய கட்டிடப் பணிகள், பேருந்து நிலைய அடிப்படை வசதிகள், குடிநீர் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் மேலப்பாளையம், கோயம்பள்ளி மேம்பாலங்களுக்கான அணுகுசாலை அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும் ஆய்வு செய்தனர்.
17-வது சட்டமன்றப் பேரவையின் 2026–2027 ஆம் ஆண்டுக்கான அரசு உறுதிமொழிக் குழுத் தலைவர் விஜய் சரவணன் தலைமையில், 12 உறுப்பினர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

ஆய்வைத் தொடர்ந்து, நிலுவையில் உள்ள திட்டங்களை விரைந்து முடிப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த குழுத் தலைவர் விஜய் சரவணன், கரூர் மாவட்டத்தில் அரசின் பல்வேறு உறுதிமொழிகள் மற்றும் நிலுவையில் உள்ள வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.
நீண்டகாலமாக நடைபெற்று வரும் பாலம் மற்றும் நீர்வழிப் பணிகளை வரும் டிசம்பர் மாதத்திற்குள் முழுமையாக முடிக்க அதிகாரிகள் இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும், தற்போது 90 சதவீதத்திற்கும் அதிகமான பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், பணிகளை விரைந்து முடிக்கத் தேவையான கூடுதல் நிதி ஒதுக்கீடு தொடர்பாகவும் குழு பரிந்துரைத்துள்ளதாகத் தெரிவித்தார். இந்த ஆய்வின் அடிப்படையில் விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு சட்டமன்றப் பேரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
