Skip to content
Home » ஸ்டாலின் சிறந்த முதல்வர்…. பரூக் அப்துல்லா பாராட்டு

ஸ்டாலின் சிறந்த முதல்வர்…. பரூக் அப்துல்லா பாராட்டு

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் முன்னாள் தலைவருமான பரூக் அப்துல்லா நேற்று கொடைக்கானலுக்கு வருகை தந்தார். கொடைக்கானலில் அவரது தந்தை ஷேக் அப்துல்லா, கடந்த 14-7-1965 முதல் 15-6-1967 வரை சுமார் 2 ஆண்டுகள் அரசு விருந்தினர் இல்லமான கோகினூர் மாளிகையில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். பின்னர் அவரது நினைவாக அரசு விருந்தினர் மாளிகைக்கு அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர்., ‘கோகினூர் ஷேக் அப்துல்லா மாளிகை’ என்று 1984-ம் ஆண்டு பெயர் சூட்டினார்.

இந்தநிலையில் கோகினூர் ஷேக் அப்துல்லா மாளிகைக்கு சென்ற பரூக் அப்துல்லா, அங்குள்ள வளாகத்தை பார்வையிட்டார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் தனது தந்தை குறித்த பழைய நினைவுகளை அவர் பகிர்ந்துகொண்டார். பின்னர் பரூக் அப்துல்லா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- 43 ஆண்டுகளுக்கு பிறகு, நான் கொடைக்கானலுக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆருடன் நானும், அன்னை தெரசாவும் கொடைக்கானலுக்கு வந்தது பசுமை நிறைந்த நினைவுகளாக உள்ளது. அந்த நினைவுகளை மீண்டும் நினைவுகூருவதற்காக நான் இங்கு வந்தேன். பா.ஜ.க. அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு சட்டத்தை ரத்து செய்தது. இருப்பினும் தீவிரவாதம் அங்கு குறையவில்லை. தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு ராஜூரி மாவட்டத்தில் தீவிரவாத தாக்குதல் நடந்தது. இன்றளவும் அங்கு தீவிரவாதம் முடிவுக்கு வரவில்லை. இந்தியாவில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட்டால் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரை சிறப்பாக நடைபெற்று வருகிறது. இது, இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ராகுல்காந்தி அரசியல் நகர்வுகளை திறம்பட செய்து வருகிறார். இந்தியா என்பது பன்முகம், பல மொழி, பல்வேறு மதங்களைக் கொண்ட நாடு. வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு. இங்கு ஒரே நாடு, ஒரே மொழி என்பது சாத்தியமில்லை. ஜி-20 மாநாடு தற்போது உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவை சீர்படுத்த உதவுவதாக இருக்கும். பிரதமர் மோடியும், பா.ஜ.க.வும் சிறப்பாக செயல்படுவதாக கூறுகின்றனர். ஆனால் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேசுவதற்கும், விவாதம் செய்வதற்கும் கூட அவர்கள் அனுமதிப்பதில்லை.

ஒன்றுபட்ட இந்தியாவை நாங்கள் விரும்புகின்றோம். பிளவுபட்ட இந்தியா எங்களுக்கு தேவை இல்லை. தமிழகம் சிறந்த மாநிலமாக உள்ளது. தமிழகத்தில் கல்வி, சுகாதாரம், சாலை, உள்ளிட்ட அனைத்து துறைகளும் சிறப்பாக உள்ளன. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறந்த முதல்வராக செயல்படுகிறார். அவருக்கு என்னுடைய பாராட்டுக்கள். இவ்வாறு அவர் கூறினார்.
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!