திருச்சி அருகே துறையூர்–முசிறி சாலையில் மாருதி ஈகோ கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வேப்பமரத்தில் மோதிய விபத்தில், தஞ்சாவூர், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளர்கள் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 2 பேர் படுகாயமடைந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள மகாராஜபுரம், சாத்தனூர் பகுதிகளைச் சேர்ந்த 10 தொழிலாளர்கள், நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டியில் நடைபெற்ற நண்பர் வீட்டு காதுகுத்து விழாவில் பங்கேற்றுவிட்டு மாருதி ஈகோ காரில் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது துறையூர்–முசிறி சாலையில் ஜெம்புநாதபுரம், போதுர்பட்டி நால்ரோடு அருகே சென்றபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வேப்பமரத்தில் பலமாக மோதியது. இதில் காரில் பயணம் செய்த மாணிக்கம் (42), சங்கிலி (44), முருகன் (42), ராஜேஷ் (43), பாவாடை (50) ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பலத்த காயமடைந்த சக்திவேல் (42), சுப்பிரமணி (45), சீதாராமன் ஆகிய 3 பேர் முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.
விபத்தில் காயமடைந்த ராமலிங்கம், ராமர் ஆகிய இருவரும் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்விபத்து குறித்து ஜெம்புநாதபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
