Skip to content
Home » பிபர்ஜாய் புயலில் பூத்த 707 புதுமலர்கள்

பிபர்ஜாய் புயலில் பூத்த 707 புதுமலர்கள்

அரபிக்கடலில் 10 நாட்களுக்கு மேலாக நிலை கொண்டிருந்த பிபர்ஜாய் புயல், அதிதீவிர சூறாவளியாக நேற்று முன்தினம் கரையை கடந்தது. குஜராத்தின் கட்ச் பகுதியில் ஜகாவு துறைமுகம் அருகே மாலை 6.30 மணி முதல் கரையை கடந்தது. அப்போது 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இதனால், குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள், மின்கம்பங்கள் சரிந்தன. 1000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின.  இதனால் மாநிலம் முழுவதும் பெரும் சேதம் ஏற்பட்டது.

எனினும், சில குடும்பங்களுக்கு நல்ல செய்தியும் கிடைத்து உள்ளது. புயலின்போது மொத்தம் 1,171 கர்ப்பிணிகள் பாதிக்கப்பட்டனர். அவர்களில் ஒரு சிலருக்கு பிரசவ காலம் நெருங்கியிருந்தது.  புயலுக்கு மத்தியில் 707 கர்ப்பிணிகள் குழந்தைகளை பெற்றெடுத்து உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குஜராத் சுகாதார துறையானது முன்பே, கர்ப்பிணிகளின் பட்டியலை தயாரித்து இருந்தது. அவர்களை மருத்துவமனைகள், சுகாதார மையங்கள் அல்லது அனைத்து வசதிகளும் கொண்ட ஆம்புலன்சுகளுக்கு பாதுகாப்பாக கொண்டு சென்றனர்.

இதனால், கர்ப்பிணிகள் குழந்தைகளை நல்ல முறையில் பெற்றெடுத்து உள்ளனர். இந்த நிலையில், மாண்டவி பகுதியில் கர்ப்பிணி ஒருவர் சிக்கலான நிலையில் இருந்து உள்ளார். புயலின்போது பலத்த காற்று, கனமழைக்கு இடையே சிக்கியுள்ளார். அவருக்கு பிரசவ வலி எந்த நேரமும் ஏற்பட கூடிய நிலை இருந்தது. இதன்பின் அவர் மாண்டவி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரசவம் நடந்தது. இதுபற்றி அந்த மருத்துவமனையின் டாக்டர் துருவ் கூறும்போது, மிக சிக்கலான நிலையில் ஒரு கர்ப்பிணி இருக்கிறார் என எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 35 கி.மீ. தொலைவில் இருந்த அவர், மருத்துவமனையை வந்து அடைவதற்கு 3 மணிநேரத்திற்கும் கூடுதலாக நேரம் ஆனது. இது நிலைமையை இன்னும் சிக்கலாக்கியது. உள்ளூரில் மயக்க மருந்து வசதி இல்லாத சூழலில், அவர்கள் இந்த மருத்துவமனைக்கு வந்து உள்ளனர். இதனாலேயே சிக்கல் அதிகரித்து உள்ளது. அறுவை சிகிச்சை செய்தே குழந்தை பிறக்க கூடிய சூழல் இருந்தபோதும், அறுவை சிகிச்சையின்றி பிரசவம் மேற்கொண்டோம். தாய் மற்றும் சேய் நலமுடன் உள்ளனர் என கூறினார். கடந்த 2 நாட்களில், பிபர்ஜாய் புயல் சூழ்ந்த சூழலில், இதுபோன்று 45 நோயாளிகள் வந்து உள்ளனர். கடந்த 2 முதல் 3 நாட்களாக இதுபோன்று நிறைய பேர் வந்து உள்ளனர் என அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!