Skip to content
Home » ஜி-20 மாநாட்டிற்கு வந்த சீன பிரதிநிதிகள் கொண்டு வந்த மர்ம ‘பைகள்’ … இருந்தது என்ன..?

ஜி-20 மாநாட்டிற்கு வந்த சீன பிரதிநிதிகள் கொண்டு வந்த மர்ம ‘பைகள்’ … இருந்தது என்ன..?

டில்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் கடந்த 9 மற்றும் 10-ந் தேதிகளில் ஜி-20 மாநாடு நடைபெற்றது. இந்தியா தலைமை தாங்கி நடத்திய இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் தங்குவதற்காக டில்லியில் நட்சத்திர ஓட்டல்களில் அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதன்படி சீன பிரதிநிதிகளுக்காக தாஜ் பேலஸ் ஓட்டல் ஒதுக்கப்பட்டது. சீனாவில் இருந்து அதிபர் ஜின்பிங்குக்கு பதிலாக சீன பிரதமர் லீ கியாங் தலைமையில் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இவர்கள் அந்த ஓட்டலுக்குள் நுழையும்போது வழக்கத்துக்கு மாறான அளவில் பெரிய பைகளை எடுத்துச் சென்றுள்ளனர். அவை சந்தேகத்துக்கு இடமான வகையில் இருந்துள்ளது. இதனால் பாதுகாப்பு அதிகாரிகள் அதனை சோதனை செய்ய முயற்சித்தனர். பின்னர் இருநாட்டு விவகாரங்களில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது என கருதி விட்டுவிட்டனர். இதன்பிறகு அந்த ஓட்டலின் ஊழியர் அந்த பைகளை கொண்டு சென்றவரின் அறைக்கு பணி நிமித்தமாக சென்றபோது அந்த பைகளில் சந்தேகத்துக்கு இடமான பொருட்களை கண்டதாக தெரிகிறது. இதுகுறித்து பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த பைகளை ‘ஸ்கேன்’ செய்து பார்க்க பாதுகாப்பு அதிகாரிகள் வற்புறுத்தினர். ஆனால் சீன பிரதிநிதிகள் வலுக்கட்டாயமாக அதற்கு மறுப்பு தெரிவித்தனர். வேண்டுமென்றால் அந்த பைகளை தங்களது தூதரகத்துக்கு எடுத்துச் செல்வதாக கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் அதற்கு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து அந்த பைகள் சீன தூதரகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அதுவரை சுமார் 12 மணிநேரம் அந்த அறைக்கு வெளியே 3 பாதுகாப்பு அதிகாரிகள் காவலுக்கு நின்றனர். அந்த பைகளில் இருந்தது என்ன? என்று கடைசிவரை தெரியவில்லை. இதற்கிடையே ஓட்டல் நிர்வாகத்திடம் சீன பிரதிநிதிகள் தங்களுக்கு தனிப்பட்ட இணைய இணைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாகவும் தெரிகிறது. அதே ஓட்டலில் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவும் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!