Skip to content
Home » டில்லியில் உலகத்தலைவர்கள்…..நாளை தொடங்குது ஜி20 உச்சி மாநாடு

டில்லியில் உலகத்தலைவர்கள்…..நாளை தொடங்குது ஜி20 உச்சி மாநாடு

டில்லியில் நாளையும் நாளை மறுதினமும் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. ஜி20 அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மட்டுமின்றி உறுப்பினர் அல்லாத பல்வேறு நாடுகளின் தலைவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கின்றனர். இதற்காக அவர்களுக்கு முறைப்படி அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி உலக நாடுகளின் தலைவர்கள் டில்லிக்கு வந்தவண்ணம் உள்ளனர்.

உச்சி மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்கள் மற்றும் வராத தலைவர்கள் குறித்து பார்ப்போம். மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்கள்: அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்டில்லிக்கு வருவதையும், ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதையும் இன்று உறுதிப்படுத்தினார். உக்ரைனில் போரினால் ஏற்பட்ட சமூக தாக்கம், தூய்மையான ஆற்றல் உற்பத்திக்கு மாறும் திட்டம், காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்க பைடன் விரும்புகிறார்.

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், இந்தியாவிற்கு முதல் முறையாக அரசு முறைப் பயணம் மேற்கொள்வதை உறுதி செய்தார். அதன்படி இன்று மதியம் அவர் டில்லி வந்தடைந்தார்.  ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவும் தனது டில்லி பயணத்தை உறுதி செய்துள்ளார். அவர் உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷியாவிற்கு எதிராக விமர்சனத்தை முன்வைக்க வாய்ப்பு உள்ளது. தற்போது இந்தோனேசியாவில் இருக்கும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக அவரது அலுவலகம் உறுதி செய்திருக்கிறது.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், மாநாட்டில் பங்கேற்க உள்ளார். அத்துடன் மாநாட்டின் இடையே இந்திய பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ், ஜெர்மன் சான்சலர் ஓலப் ஸ்கோல்ஸ் ,தென் கொரிய அதிபர் யூன் சுக் யியோல், தென் ஆப்பிரிக்க அதிபர் சிறில் ரமாபோசா, துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன் ஆகியோரும் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளாத தலைவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆவார். சீனாவில் இருந்து பிரதமர் லி கியாங் தலைமையிலான பிரதிநிதிகள் குழு ஜி 20 மாநாட்டில் பங்கேற்க உள்ளது. ஜி20 தலைவர்களின் உச்சி மாநாட்டில் சீன அதிபர் பங்கேற்காமல் இருப்பது இதுவே முதல் முறை. ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கமாட்டார். உக்ரைனில் போர்க்குற்றம் புரிந்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

எனவே, அவர் வெளிநாடு சென்றால் கைது செய்யப்படும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக அவர் இந்தியாவிற்கு வரவில்லை. அவருக்கு பதில், டில்லி ஜி20 உச்சி மாநாட்டில் ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பங்கேற்கிறார். கொரோனா பாதிப்பு காரணமாக ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ் மாநாட்டில் பங்கேற்க முடியவில்லை என தெரிவித்துள்ளார். மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோரும் பங்கேற்க மாட்டார். பிற நாடுகளின் தலைவர்கள் வங்காளதேசம், நெதர்லாந்து, நைஜீரியா, எகிப்து, மொரீஷியஸ், ஓமன், சிங்கப்பூர், ஸ்பெயின், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி போன்ற சர்வதேச அமைப்புகளின் உயர் அதிகாரிகளும் உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!