கர்நாடகாவில் அடுத்த மாதம் 10-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் பிரசாரம் தீவிரமடைந்து வருகிறது. ஆளுங்கட்சியான பா.ஜ.க.வை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு பா.ஜ.க. தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர் என்பதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடாக் மாவட்டம் ரான் பகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடியின் சித்தாங்கள் விஷப்பாம்பு போன்றது என்று ஒப்பிட்டுப் பேசினார். இது பா.ஜ.க.வினரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. கார்கேவுக்கு தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி குறித்து தெரிவித்த கருத்துகளுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனது கருத்துகள் யாரையாவது புண்படுத்தி இருந்தாலோ, மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருந்தாலோ அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.