தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா மிதிவண்டி திட்டத்தின் கீழ், நவீன மிதிவண்டிகளின் விலையை ஹீரோ நிறுவனம் குறைத்துள்ளது. ஆண்களுக்கான மிதிவண்டியை ரூ. 5,260 மதிப்பில் வழங்கவும் , பெண்களுக்கான மிதிவண்டியை ரூ. 5,130 மதிப்பில் வழங்க ஹீரோ நிறுவனம் முன் வந்துள்ளது.
முன்னதாக ஆண்கள் மிதிவண்டிக்கு ரூ. 7,235, பெண்கள் மிதிவண்டிக்கு ரூ. 7,476 என ஹீரோ நிறுவனம் கூறியிருந்தது. 7 ஆயிரம் ரூபாய் கொடுத்து மிதிவண்டி வாங்குவதா என எதிர்ப்பு எழுந்திருந்த நிலையில் அரசு நடத்திய 9 கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் விலையை ஹீரோ நிறுவனம் குறைத்துள்ளது. மேலும், ஹெல்மெட் மற்றும் தண்ணீர் பாட்டிலுடன் நவீன மிதிவண்டி வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் மிக முக்கியமான கல்வி நலத்திட்டமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 5,32,388 தொகுப்புகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. இதில் 2,37,133 மாணவர்களுக்கும், 2,95,255 மாணவிகளுக்கும் சைக்கிள், ஹெல்மெட் மற்றும் வாட்டர் பாட்டில் வழங்கப்படவுள்ளது.
மாணவர்களுக்கான மிதிவண்டியின் அடிப்படை விலை ரூ. 4,369.00 மற்றும் 5% ஜிஎஸ்டி ரூ. 218.45 ஆகும். இதனுடன் தலைக்கவசம் ரூ. 560.5 (ஜிஎஸ்டி உட்பட) மற்றும் தண்ணீர் பாட்டில் ரூ. 112.1 (ஜிஎஸ்டி உட்பட) சேர்த்து ஒரு தொகுப்பின் மொத்த விலை ரூ. 5,260 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மாணவியருக்கான மிதிவண்டியின் அடிப்படை விலை ரூ. 4,245.30 மற்றும் 5% ஜிஎஸ்டி ரூ. 212.27 ஆகும். தலைக்கவசம் ரூ.560.5 மற்றும் தண்ணீர் பாட்டில் ரூ.112.1 ஆகியவற்றுடன் சேர்த்து ஒரு தொகுப்பின் மொத்த விலை ரூ. 5,130 என இறுதி செய்யப்பட்டுள்ளது.
