Skip to content
Home » புத்தாண்டு…….கோலாகலமாக வரவேற்ற மக்கள்….. கோயில்களில் சிறப்பு வழிபாடு

புத்தாண்டு…….கோலாகலமாக வரவேற்ற மக்கள்….. கோயில்களில் சிறப்பு வழிபாடு

  • by Senthil

  அரசியலிலும், பொதுமக்கள் வாழ்க்கையிலும் பல சோதனைகளை கொடுத்த 2023 நேற்றுடன் விடைபெற்றது. இன்று 2024புத்தாண்டு  பிறந்தது.  இந்த புத்தாண்டை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.  பக்தர்கள் கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகளுடன் வரவேற்றனர். இளைஞர்கள்  கடற்கரைகளிலும்,  கேளிக்கை  விடுதிகளிலும்,  திறந்த வௌிகளிலும் பட்டாசு வெடித்து, ஆட்டம் பாட்டத்துடன் வரவேற்றனா்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி  ஆரோக்கியமாதா தேவாலயத்தில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக நள்ளிரவு 12 மணிக்கு  சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது. இதில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். இதற்காக தமிழ் நாடு மட்டுமல்லாமல், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, கோவா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்கள் வந்திருந்தனர். இன்று காலையிலும் மக்கள்  தேவாலயத்தில்  பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதனால் வேளாங்கண்ணி மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் கோயிலில்  நள்ளிரவு முதல் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். இதுபோல மலைக்கோட்டை  உச்சிபிள்ளையார் கோயில்,   தாயுமானவர் சுவாமி கோயில்களில் பக்தர்கள் குடும்பத்தோடு வந்திருந்து   வழிபாடு நடத்தினர். இதுபோல திருச்சி மாவட்டத்தில் உள்ள  அனைத்து  கோயில்கள், தேவாலயங்களில்  சிறப்பு வழிபாடு நடந்தது.

பிரசித்திபெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நடந்த புத்தாண்டு சிறப்பு வழிபாட்டில் ஆஞ்சநேயருக்கு 7 டன் மலர்களால்  அபிசேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

சென்னையில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் ஒருபுறம் நடந்தாலும், கோயில்களில்  மக்கள் கூட்டமும் அதிக அளவில் காணப்பட்டது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், தியாகராய நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம், பத்மாவதி தாயார் சந்நிதானம், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில், சீனிவாசப் பெருமாள் கோயில், கோயம்பேட்டில் உள்ள குறுங்காலீஸ்வரர் கோயில், பாடி திருவல்லீஸ்வரர் சிவன் கோயில், புறநகர் பகுதிகளில் உள்ளதிருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில், மாங்காடு காமாட்சியம்மன் கோயில் உட்பட அனைத்து கோயில்களிலும் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. சிறப்பு மலர் அலங்காரங்களும் செய்யப்பட்டிருந்தன.

அனைத்து கோயில்களிலும் அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமிதரிசனம் செய்தனர். பல்வேறு கோயில்களில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. கொடையாளர்கள் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது. இரவு 10 மணி வரை பக்தர்கள், தடையில்லா தரிசனத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதேபோல், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், மயிலாப்பூர் பிரகாச மாதா ஆலயம் (லஸ் சர்ச்), ராயப்பேட்டை காணிக்கை அன்னை ஆலயம், எழும்பூர் திரு இருதய ஆண்டவர் திருத்தலம், புதுப்பேட்டை புனித அந்தோணியார் ஆலயம், பரங்கிமலை புனித தோமையார் ஆலயம், பாரிமுனைதூய மரியன்னை இணை பேராலயம், நுங்கம்பாக்கம் செயின்ட் தெரசாஆலயம், பெரம்பூர் லூர்து அன்னை திருத்தலம் உள்ளிட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ளஅனைத்து தேவாலயங்களிலும் நேற்று சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். அவர்கள் இனிப்புகளை பகிர்ந்து புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!