கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில் நிலம் என நோட்டீஸ்: கரூரில் குடியிருப்போர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.
கரூர் தான்தோன்றி மலை பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடம் எனக் கூறி கோவில் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தான்தோன்றி மலை ஜே.ஜே. நகர் பகுதியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் பொதுமக்கள், தாங்கள் முறையாக பத்திரப்பதிவு செய்து வீடுகள் கட்டி வசித்து வருவதாகவும், மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்தி, குடிநீர் மற்றும் மின் இணைப்புகளையும் பெற்று வாழ்ந்து வருவதாகவும்.
மேலும், அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில், தற்போது கோவில் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறி பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையை கண்டித்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அப்பகுதி மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், தங்களது குடியிருப்புகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவையும் வழங்கினர்.
