கோவையில் மாணவன் அகிலன் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர் மற்றும் தொடர்புடைய மாணவர்கள் மீது இதுவரை கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கண்டித்து, மாணவனின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் 14 அரசியல் கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இணைந்து கோவை

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று, தங்களது எதிர்ப்பை முழக்கங்களாக எழுப்பினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பழைய நுழைவாயிலில் இருந்து புறப்பட்ட அவர்கள்,

பிஎஸ்என்எல் அலுவலகச் சாலை வழியாக நடந்து சென்று, வழிநெடுகிலும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இந்தப் பேரணியில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நாகை திருவள்ளுவன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் புதிய நுழைவாயில் வழியாக வந்தடைந்தவர்கள், மாணவன் அகிலனின் மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கச் சென்றனர்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்ததால், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில் ஏசி கோகுல் கிருஷ்ணன் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
