கேரளம் : மாநிலத்தில் மூத்த குடிமக்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் பராமரிப்பை உறுதி செய்யும் வகையில், பெற்றோரிடமிருந்து சொத்துகளை எழுதி வாங்கிக்கொண்டு அவர்களைக் கைவிடும் வாரிசுகளுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வழிவகை செய்யும் முக்கியச் சட்ட மசோதா கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சமீபகாலமாக வயதான பெற்றோரின் பெயரில் உள்ள சொத்துகளைப் பிள்ளைகள் தங்கள் பெயருக்கு மாற்றிக்கொண்டு, அதன் பிறகு அவர்களைப் பராமரிக்காமல் கைவிடுவதும், முதியோர் இல்லங்களில் சேர்ப்பதும், மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்துவதும் அதிகரித்து வருகிறது. இத்தகைய செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் கேரள அரசு இந்தப் புதிய சட்ட மசோதாவைக் கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டத்தின்படி, பெற்றோரிடமிருந்து சொத்துகளைப் பெற்ற பிறகு அவர்களைப் புறக்கணித்தாலோ, கைவிட்டாலோ அல்லது துன்புறுத்தினாலோ சம்பந்தப்பட்டவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
மேலும், முதியோர்களின் நலனைக் காக்கும் வகையில் இந்தியாவிலேயே முதன்முறையாகக் கேரளாவில் மூத்த குடிமக்களுக்கெனத் தனித் துறை (Separate Department for Senior Citizens) உருவாக்கப்படவுள்ளது. இதன் மூலம் முதியோர்களுக்கான நலத்திட்டங்கள், மருத்துவ உதவிகள் மற்றும் சட்டப் பாதுகாப்பைத் தனித்துறையின் கீழ் ஒருங்கிணைத்துச் சிறப்பாகச் செயல்படுத்த முடியும் எனக் கேரள அரசு தெரிவித்துள்ளது.
இதனுடன், மாநிலத்தில் செயல்பட்டு வரும் முதியோர் இல்லங்களை ஒழுங்குபடுத்துவதற்கான கடுமையான விதிகளும் இந்த மசோதாவில் இணைக்கப்பட்டுள்ளன. அதன்படி, அரசின் உரிய அனுமதி மற்றும் உரிமம் பெறாமல் சட்டவிரோதமாக முதியோர் இல்லங்களை நடத்தினால், சம்பந்தப்பட்டவர்களுக்கு ஓராண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கவும் இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது.
கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ள இந்த முக்கியத்துவம் வாய்ந்த சட்ட மசோதா, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளது. ஆளுநரின் ஒப்புதல் கிடைத்தவுடன் இந்தச் சட்டம் மாநிலம் முழுவதும் உடனடியாக நடைமுறைக்கு வரும். மூத்த குடிமக்களின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் கேரள அரசின் இந்த நடவடிக்கை சமூக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
