Skip to content
Home » ஜல்லிக்கட்டு வெல்லட்டும்…. ஒற்றுமையாக நடத்துங்கள்…. முதல்வர் பேச்சு

ஜல்லிக்கட்டு வெல்லட்டும்…. ஒற்றுமையாக நடத்துங்கள்…. முதல்வர் பேச்சு

  • by Senthil

மதுரை அலங்காநல்லூர் அடுத்த கீழக்கரை என்ற இடத்தில்  கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல்  அரங்கம்  ரூ.64 கோடியில் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா இன்று காலை நடந்தது.  முதல்வர் மு.க. ஸ்டாலின் அரங்கத்தை திறந்து வைத்து பேசினார். அவர் பேசியதாவது:

மதுரை தூங்காநகரம் , போட்டி என்று வந்து விட்டால்   தோல்வியை தூள் தூளாக்கும் நகரம் என்பதை வாடிவாசல் ஆண்டுதோறும் மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறது. சங்கம் வளர்த்த மதுரையில் மாபெரும் ஏறுதழுவுதல் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
திராவிடமாடல் அரசால்  கலைஞர் நூற்றாண்டையொட்டி இந்த அரங்கம் கட்டப்பட்டு இப்போது  திறக்கப்படுகிறது.  ஏறுதழுவுதல் தமிழனின் பெருமை.ஏறுதழுவுதல் அரங்கத்தை திறந்து வைத்தது எனக்கு கிடைத்த பெருமை. ஏறுதழுவுதல் அரங்கத்தை கட்டியவர் ஸ்டாலின் என்ற பெருமை வரலாற்றில் இடம்பெறும்.

திமுக ஆட்சி அமைந்து 3 ஆண்டுகள் ஆகிறது.3 ஆண்டில் மதுரைக்கு 3 கம்பீரமான  சின்னங்கைளை அமைத்து உள்ளோம்.  கீழடி அருங்காட்சியம், அடுத்தது  மதுரையில் அறிவு மாளிகையான  கலைஞர் நூற்றாண்டு நூலகம், இன்று ஏறுதழுவுதல் அரங்கம் என  மூன்று சின்னங்கள் ஏற்படுத்தி உள்ளோம்.

அதே நேரத்தில் மதுரையில் 2018ல் அறிவித்த, இன்னும் கொண்டுவரப்படாத திட்டம் அப்படியே இருக்கு.  அது உங்க ஞாபகத்துக்கு வந்தால் நான் பொறுப்பல்ல.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் உள்ள ஓவியங்களில்  திமில் உள்ள காளைகள் இருந்துள்ளன.  கீழடி அகழாய்வில்  அதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.  தை மாதம் பிறந்து விட்டால் முதல் 3 நாட்கள்   தமிழகத்தில் அரசு விடுமுறை. கருவூலம் தவிர  மற்ற அனைத்து அலுவலகங்களுக்கும் விடுமுறை.  அந்த காலத்தில் தமிழர்களின் பண்பாடு, பாரம்பரியம்  முழுமையாக தெரிந்த கவர்னர்கள் இருந்துள்ளனர்.

விரைவில் கலைஞர் நினைவிடம் திறப்பு விழா நடைபெறவிருக்கிறது.  ஏறுதழுவுதலில் கலைஞர் தனி  பாசம் கொண்டவர். அதனால் தான் தனது முதல் பிள்ளையான முரசொலி சின்னம் கூட ஏறுதழுவும் வீரராக தேர்வு செய்தார்.  ஏறுதழுவுதல் என்பது பொழுதுபோக்கு அல்ல. அது  விவசாயிகளின் வாழ்வோடு கலந்தது.   ஏறுதழுவுதல்  தடை செய்யப்பட்டபோது,  அது தமிழர்களின் கலாச்சாரம் என வாதாடியது திமுக.  2014ல்  ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டபோது அதற்கு எதிராக தமிழகத்தில் இளைஞர்கள் ஜல்லிக்கட்டு புரட்சியை நடத்தினர்.  சென்னையில்  தொடங்கிய அந்த புரட்சி பின்னர் தமிழகம் முழுவதும் பரவியது.  அதற்கு  அதிமுக அரசு பணிந்தது.

இந்த அரங்கத்தில்  ஏறுதழுவுதல் தொடர்பான அருங்காட்சியகம், நூலகம் உள்ளது.  சாதி, மத பேதங்கள் பிற்காலத்தில்  உருவாக்கப்பட்டவை. அதற்கு நாம் இடங்கொடுக்காமல்  ஒற்றுமையாக இங்கு  ஏறுதழுவுதல் போட்டியை நடத்துங்கள்.  தமிழ் வாழ்க,  வீரவிளையாட்டு ஏறுதழுவுதல் வெல்லட்டும்.

இவ்வாறு அவர் பேசினார். விழாவில் அமைச்சர்கள்,  தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா ஆகியோரும் பங்கேற்றனர்.  அதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் ஸ்டாலின்  கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!