Skip to content
Home » நெல்லை நகை வியாபாரியை கடத்தி ரூ.1.5 கோடி கொள்ளை… பட்டப்பகலில் துணிகரம்

நெல்லை நகை வியாபாரியை கடத்தி ரூ.1.5 கோடி கொள்ளை… பட்டப்பகலில் துணிகரம்

நெல்லை டவுனை சேர்ந்தவர் சுஷாந்த் (வயது 40). இவர் நெல்லையில் நகைக்கடை மற்றும் ஷாப்பிங் பொருட்கள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவர் இன்று காலை நகைகள் வாங்குவதற்காக கேரள மாநிலம் நெய்யாற்றங்கரைக்கு தனது காரில் 2 உதவியாளர்களுடன் சென்றுள்ளார். அப்போது நெல்லையில் இருந்து இவரது காரை தொடர்ந்து முன்னும் பின்னும் 2 கார்கள் வந்துள்ளன.  நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு ரெயில்வே மேம்பாலத்தில் வரும்போது திடீரென 2 கார்களிலும் வந்த முகமூடி கும்பல் சுஷாந்தின் காரை வழிமறித்து நிறுத்தி அவர் மீது மிளகாய் பொடிதூவி கம்பியால் தாக்கியுள்ளனர்.

பின்னர் காரின் கண்ணாடியை உடைத்து அதில் இருந்த ரூ.1.50 கோடியை திருட முயன்றுள்ளனர். உடனே சுஷாந்த் கத்தி கூச்சலிட்டுள்ளார். அப்போது அவ்வழியே வந்த தனியார் ஆம்னி பஸ் டிரைவர், நடத்துனர் மற்றும் பயணிகள் சுஷாந்தின் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்து கொள்ளையர்களை விரட்டி உள்ளனர்.

இதனால் சுதாரித்துக்கொண்ட முகமூடி கொள்ளையர்கள் சுஷாந்தை தாங்கள் வந்த காரில் தூக்கிப்போட்டு, அவரது காரையும் கடத்தி சென்று விட்டனர். சிறிது தொலைவு வந்ததும் சுஷாந்தை நடுவழியில் இறக்கிவிட்ட அந்த கும்பல் நாகர்கோவில் நோக்கி காரை ஓட்டி சென்றுள்ளது.

தொடர்ந்து சென்றால் நாங்குநேரி சுங்கச்சாவடியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் சிக்கிக் கொள்வோம் என்பதை அறிந்த கொள்ளையர்கள் சுங்கச்சாவடிக்கு முன்பு உள்ள நெடுங்குளம் தேசிய நெடுஞ்சாலை விலக்கில் திரும்பி நெடுங்குளம் கிராமத்தை நோக்கி சென்றனர். அங்குள்ள குளத்தின் கரையோரம் சுஷாந்தின் காரை நிறுத்தி அதில் இருந்த பணத்தை தங்கள் காருக்கு மாற்றிய கொள்ளை கும்பல் சுஷாந்தின் காரை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் நாங்குநேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனிடைய கொள்ளையர்கள் தாக்குதலில் காயமடைந்த சுஷாந்த் பயத்தில் நெல்லையில் உள்ள தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்கள் வந்த பின் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நாங்குநேரி இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் மூன்றடைப்பு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் சுஷாந்திடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் கொள்ளையடிக்கப்பட்ட பணம் குறித்து முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவிப்பதால் அது ஒருவேளை கருப்பு பணமாக இருக்கலாம் எனவும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் வாகன போக்குவரத்து அதிகம் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த துணிகர முகமூடி கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் தப்பி ஓடிய முகமூடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!