Skip to content
Home » கோடநாடு கொலை, கொள்ளை…. சிபிசிஐடி இடைக்கால அறிக்கை தாக்கல்

கோடநாடு கொலை, கொள்ளை…. சிபிசிஐடி இடைக்கால அறிக்கை தாக்கல்

  • by Senthil

நீலகிரி மாவட்டம் கோட   நாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. இதனை தடுக்கச் சென்ற காவலாளி ஓம்பகதூர் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான கனகராஜ் விபத்தில் இறந்து விட்டார். தற்போது இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையிலான அதிகாரிகள் இதுவரை பலரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு கடந்த 6 ஆண்டுகளாக ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்று இந்த வழக்கு நீதிபதி அப்துல்காதர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. குற்றம்சாட்டப்பட்ட வாளையார் மனோஜ், ஜம்சீர் அலி உள்ளிட்டோர் கோர்ட்டில் ஆஜராகினர். சி.பி.சி.ஐ.டி. தரப்பில் வக்கீல்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் வாதாடினர்.

சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஏ.டி.எஸ்.பி. முருகவேல், வழக்கின் இடைக்கால விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார். 4 பக்கம் கொண்ட அந்த அறிக்கையில் வழக்கு தொடர்பாக 167 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதாகவும், அவர்களிடம் விசாரணை நடத்தவேண்டியுள்ளது. எனவே தங்களுக்கு விசாரணையை இறுதி செய்ய அவகாசம் தேவை என கூறப்பட்டு இருந்தது. இதை ஏற்று நீதிபதி அப்துல்காதர் வழக்கை அக்டோபர் 13-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்த வழக்கில் விபத்தில் இறந்த கனகராஜின் சகோதரர் தனபாலும் கைது செய்யப்பட்டிருந்தார்.

ஜாமினில் வெளியே வந்த அவர் வழக்கு தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தபடி உள்ளார். இதனால் அவரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர். இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. வருகிற 14-ந் தேதி கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக வழக்கு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!