கோவை மாவட்டம் , சிறுமுகை அருகே உள்ள ஜடையம்பாளையம்புதூர் பகுதியை சேர்ந்தவர் முருகையன் மனைவி சரோஜா(55) இவர்களுக்கு திருமணமாகி சுரேஷ்குமார் (37) என்ற மகனும், நித்யாபிரியா (33) என்ற மகளும் உள்ளனர். சரோஜா ஜடையம்பாளையம் புதூரில் குடியிருந்து வரும் நிலையில் தினமும் மதியம் மகன் சுரேஷ் குமார் வீட்டிற்கு வந்து அம்மாவை பார்த்துவிட்டு அருகில் உள்ள தங்களது தோட்டத்தையும் கவனித்துச் சென்று வந்துள்ளார். இந்த நிலையில் இன்று மதியம் மாலை வழக்கம்போல் மகன் சுரேஷ் குமார் வீட்டிற்கு வந்தபோது வீட்டில் அம்மா சரோஜா ரத்த வெள்ளத்தில் கழுத்து அறுக்கபட்டு உயிரிழந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அவர் கத்தி கூச்சலிட்டதை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்து சம்பவம் குறித்து சிறுமுகைக்காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வீட்டில் பீரோவில் வைத்திருந்த தங்க நகைகள் 20சவரன் காணாமல் போயிருப்பது தெரியவந்தது. அதே சமயத்தில் உயிரிழந்த மூதாட்டி அணிந்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்படாமல் அப்படியே இருந்தது தெரியவந்தது. மேலும் தடயவியல் நிபுணர்கள் அங்கு இருந்த தடயங்களை சேகரித்த நிலையில் மோப்ப நாய் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சாலைகளில் ஓடியதை தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சாலையில் ரத்தம் சொட்டியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கொலையாளி சாலையில் ஓடி தப்பியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் உயிரிழந்த மூதாட்டி சரோஜா உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்ம்பவம் குறித்து சிறுமுகை போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.