Skip to content
Home » காதலனை கரம் பிடிக்க கடத்தல் நாடகமாடிய இளம் பெண்…. திருச்சியில் பரபரப்பு…

காதலனை கரம் பிடிக்க கடத்தல் நாடகமாடிய இளம் பெண்…. திருச்சியில் பரபரப்பு…

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள அரியமங்கலத்தை சேர்ந்த 19வயதான இளம் பெண் ஒருவர், புதுக்கோட்டை பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பகுதியில் உய்யக்கொண்டான் வாய்க்கால் கரை பகுதியில் அழுது கொண்டு நடந்து வந்ததாகவும் அப்பொழுது அதனை பார்த்த பொதுமக்கள் அந்த பெண்ணிடம் என்னவென்று விசாரித்த போது தன்னை சிலர் தாக்கி கடத்த முயற்சித்ததாகவும் அவர்களிடமிருந்து தப்பி வந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து அப்பெண் உடனடியாக காட்டூர் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்திற்கு அழைத்து வந்து சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும் இதுகுறித்து பெண்ணின் குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த இளம்பெண்ணின் உறவினர்கள், மற்றும் பொதுமக்கள் காட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே இளம் பெண் கடத்தல் தொடர்பாக தகவலறிந்த அரியமங்கலம் போலீசார் மற்றும் திருவெறும்பூர் போலீசார் காட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த இளம்பெண், இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் தன்னை தலையில் இரும்பு கம்பியால் தாக்கிகடத்திச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாகவும் அவர்களிடமிருந்து தப்பி வந்ததாகவும், அப்படி தன்னை கடத்திச் சென்ற பொழுது தனது செல்போனில் தனது உறவினருக்கு தகவல் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

பின்னர் தன்னை நான்கு பேர் கடத்தி காரில் கடத்தி வந்ததாகவும் வயிற்றில் மிதித்ததாகவும், அவர்கள் பேசிய மொழி தெரியவில்லை என்றும், வடநாட்டவர்கள் போல் இருந்தார்கள் என்றும் கூறியுள்ளார். இப்படி அந்த இளம் பெண் முன்னுக்குப் பின் முரணாக கூறியதால் போலீசார் குழப்பம் அடைந்தனர். மேலும் மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்களும் பெண் தலை மற்றும் வயிற்று பகுதியில் தாக்கப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லையென மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணாக பேசிய இளம்பெண்ணை அரியமங்கலம் போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். இளம் பெண் கடத்தப்பட்டதாக கூறிய பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து பார்த்ததில் அதிலும் அந்த இளம்பெண் கடத்தப்பட்டது போல் எந்தவித பதிவும் இல்லையென கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த இளம்பெண்ணை விசாரணைக்காக பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அதன் அடிப்படையில் பொன்மலை மகளிர் காவல் நிலைய போலீசார் இளம்பெண்ணை அழைத்துச் சென்று விசாரித்த பொழுது அந்த இளம்பெண் திருச்சி சீராதோப்பில் உள்ள தனது உறவினர் ஒருவரை 4 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும் இதற்கிடையில் இரண்டு முறை இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு அது தடைபட்டு போனதாகவும் கூறினார். இதனால் இளம்பெண் மனம் விரக்தி அடைந்த என்ன செய்வது என்று தெரியாமல் கடத்தல் நாடகம் நடத்தியது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து காதலனை வரவழைத்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என எழுதி வாங்கிக்கொண்டு இளம்பெண்ணை பெற்றோருடன் பொன்மலை மகளிர் போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். கடத்தல் தொடர்பான வதந்திகள் நாள்தோறும் இணையத்தில் பரவி வந்து பொதுமக்கள் மத்தியில் வீதியை ஏற்படுத்தி வரக்கூடிய சூழலில் காதலுக்காக இளம் பெண் கடத்தல் நாடகம் ஆடிய சம்பவம் திருவெறும்பூர், அரியமங்கலம் மற்றும் பொன்மலை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!