Skip to content
Home » பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பாஜக பிரமுகர்

பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பாஜக பிரமுகர்

மத்திய பிரதேச மாநிலம் சித்தி தொகுதியின் பாஜக எம்எல்ஏ கேதார் நாத் சுக்லாவின் பிரதிநிதியான பிரவேஷ் சுக்லா என்பவர் மதுபோதையில், மனநலம் பாதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட நபர் பாஜக எம்எல்ஏவின் பிரதிநிதி என்பதால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் பயத்தில் போலீசில் புகார் அளிக்காமல் இருந்துள்ளனர். வீடியோ வைரலான நிலையில் தற்போது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த வீடியோவை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் ஹபீஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, கண்டனம் தெரிவித்துள்ளார்.
பழங்குடியினர் நலன் குறித்து பொய் பேசும் பாஜக தலைவர், பழங்குடியின ஏழை மீது இப்படி சிறுநீர் கழிக்கிறார். இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல் என அவர் கூறியுள்ளார். மேலும், முதல்வர் சிவராஜ் சிங் சவுகானையும் டேக் செய்துள்ள அவர், “இது தான் பழங்குடியினர் மீதான உங்கள் அன்பா? இதை காட்டு தர்பார் என்று அழைக்கவேண்டும். ஏன் பாஜக தலைவரை கைது செய்யவில்லை?” என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதேபோல் பிரவேஷ் சுக்லா பாஜக எம்எல்ஏக்களுடன் இருந்த புகைப்படங்களை மற்றொரு டுவிட்டர் பதிவில் ஷேர் செய்திருந்தார். இந்த விவகாரம் மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கவனத்துக்குச் சென்ற நிலையில், இந்தச் சம்பவத்துக்கு காரணமான குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். இந்நிலையில், தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் பிரவேஷ் சுக்லாவை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!