Skip to content
Home » மதுரை மீனாட்சியம்மன் கோவிலில்…5 பெரிய கோபுரங்களுக்கு இன்று பாலாலயம்

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில்…5 பெரிய கோபுரங்களுக்கு இன்று பாலாலயம்

  • by Senthil

மதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டின் அனைத்து மாதங்களிலும் பல்வேறு திருவிழாக்கள், வைபவங்கள், உற்சவங்கள் நடைபெறும் இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். ஆகம விதிகளின் படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும்.

அந்த வகையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 8.4.2009 அன்று குடமுழுக்கு நடைபெற்றது. தற்போது 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கான திருப்பணிகள் மேற்கொள்ள வசதியாக முதற்கட்டமாக கோவிலின் கிழக்கு ராஜகோபுரம், மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய 3 ஒன்பது நிலை கோபுரங்கள் மற்றும் அம்மன் ஏழுநிலை கோபுரம் ஆகிய 5 கோபுரங்களுக்கும் இன்று (திங்கட்கிழமை) பாலாலயம் நடைபெற உள்ளது. முன்னதாக கடந்த 2018-ல் மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுவாமி சன்னதியில் உள்ள வீரவசந்தராயர் மண்டபம் கடுமையான சேதம் அடைந்தது. இதனை சீரமைக்கும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெறுகிறது.

இதற்கிடையே மீனாட்சி அம்மன் கோவிலில் ரூ.25 கோடியில் திருப்பணிகள் நடத்தவும், வீரவசந்தராயர் மண்டபம் ரூ.18 கோடியில் சீரமைக்கப்படும் என்றும், பணிகள் அனைத்தும் முடிந்து 2 ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி பாலஸ்தாபன நிகழ்ச்சிகள் நேற்று (3-ந் தேதி) தொடங்கியது. அன்று காலை 8.30 மணி முதல் 11 மணி வரை அனுக்ஞை, யஜமான சங்கல்பம், விக்னேஸ் வர பூஜை, புண்யாகவாசனம், மகாகணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், திரவ்யாஹூதி, பூர்ணா ஹூதி, தீபாராதனை நடைபெற்றது. மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை விக்னேஸ்வர பூஜை, புண் யாகவாசனம், அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கும்பாலங்காரம், ராஜகோபுரங்கள் கலாகர்ஷணம், முதற்கால யாக பூஜை, திரவ்யாஹூதி, பூர்ணா ஹூதி, தீபாராதனை நடைபெற்றது.

இன்று (4-ந்தேதி) காலை 7.15 மணிக்கு மேல் 9.05 மணிக்குள் விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், இரண்டாம் கால யாக பூஜை, திரவ்யாஹூதி, மகா பூர்ணாஹூதி, தீபாராதனையுடன் கலசங்கள் புறப்பாடு, 9.30 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமி கோவில் ராஜகோபுர பாலஸ்தாபன மகா கும்பா பிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக பாலாலய பூஜையை முன்னிட்டு நவக்கிரக சன்னதி அருகே 5 கோபுரங்களுக்காக 5 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

இதையடுத்து யாகசாலை பூஜைகள் நிறைவடைந்ததும் புனித நீர் கலசங்கள் 2-ம் பிரகாரம் வழியாக வலம் வந்தது. பின்னர் உற்சவர் சாமி சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து அங்கு மாம்பலகையில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள 5 கோபுரங்களும் வரையப்பட்டு அதற்கு பூஜை செய்து புனிதநீர் ஊற்றி பாலாலயம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!