Skip to content
Home » பொன்முடி, மனைவிக்கு 3 ஆண்டு சிறை…ரூ. 50 லட்சம் அபராதம் ஐகோர்ட் அதிரடி……அமைச்சர் பதவி இழந்தார்

பொன்முடி, மனைவிக்கு 3 ஆண்டு சிறை…ரூ. 50 லட்சம் அபராதம் ஐகோர்ட் அதிரடி……அமைச்சர் பதவி இழந்தார்

  • by Senthil

1996-2001 திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துறை அமைச்சராக  இருந்த பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அவர் மீதும், அவருடைய மனைவி விசாலாட்சி உள்ளிட்ட குடும்பத்தினர் மீதும் 2011ல் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், இந்த வழக்கில் இருந்து பொன்முடி உள்ளிட்டோரை விடுதலை செய்து கடந்த ஜூன் மாதம் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் விதமாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்து, இதுதொடர்பாக பொன்முடி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தற்போது உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டுள்ளதால், அவருக்குப் பதிலாக நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் இந்த வழக்கை விசாரித்தார்.

இந்த வழக்கில் வருமான வரி கணக்குகள், சொத்து மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் உட்பட 39 சாட்சிகளிடம் மேற்கொண்ட புலன் விசாரணை ஆதாரங்களை சுட்டிக்காட்டி லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதேபோல் பொன்முடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், பொன்முடியின் மனைவி விசாலாட்சியின் வருமானத்தை பொன்முடியின் வருமானமாக லஞ்ச ஒழிப்புத்துறை கணக்கிட்டுள்ளது. பொன்முடியின் மனைவிக்கு 110 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அவர் தனியாக வர்த்தகம் செய்கிறார். இவற்றை புலன் விசாரணை அதிகாரி கணக்கில் கொள்ளவில்லை என்று பொன்முடி வழக்கறிஞர்கள் சார்பில் வாதிடப்பட்டது.

மேலும், குறிப்பிட்ட காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பிலான வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நவம்பர் 27 ம் தேதி எழுத்து பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டு தீர்ப்பானது தள்ளிவைக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து  கடந்த 19ம்  இந்த வழக்கில் நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார்.

அந்த தீர்ப்பில், கீழமை நீதிமன்றம் அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்றும்,   இந்த வழக்கில் தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக வரும்  21-ம் தேதி(இன்று) பொன்முடி மற்றும் அவரது மனைவி நேரிலோ அல்லது காணொளி வாயிலாகவோ  ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது. பொன்முடியும் அவரது மனைவியும் 64.90% வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளது நிரூபணமாகியுள்ளது என்றும் நீதிபதி தனது தீர்ப்பில்  கூறி இருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை 9.30 மணி அளவில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி  விசாலாட்சி, மகன்  அசோக் சிகாமணி ஆகியோர்  கோர்ட்டில் ஆஜராக  சைதாப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்டனர். அந்த காரில்   அமைச்சர்கள் காரில் கட்டப்பட்டு இருக்கும் தேசிய கொடி கட்டப்படவில்லை. 10 மணிக்கு  அமைச்சர் பொன்முடி கோர்ட்டுக்கு வந்தார்.  அதைத்தொடர்ந்து அவரது வழக்கறிஞர்கள், திமுக வழக்கறிஞர்கள், திமுக நிர்வாகிகள் பலரும் கோா்ட்டுக்கு வந்திருந்தனர்.  கோர்ட்டில்  பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

திமுக மூத்த வழக்கறிஞர் என். ஆர். இளங்கோ உள்ளிட்ட பல வழக்கறிஞர்கள் கோர்ட்டுக்கு வந்திருந்தனர்.  கோர்ட்டுக்கு வந்திருந்த பொன்முடியுடன்,  வழக்கறிஞர் இளங்கோசிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து  நீதிபதி ஜெயசந்திரன் 2வது வழக்காக பொன்முடி வழக்கை எடுத்தார். அப்போது ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என  நீதிபதி கேட்டார்.   பொன்முடிக்கான தண்டனை விவரத்தை அறிவித்தார்.  அப்போது  பொன்முடியும்,  விசாலாட்சியும் சீனியர் சிட்டிசன், பொன்முடி இருதய நோயாளி.  72 வயதானவா். விசாலாட்சி 68 வயதானவர். நோய்க்கான சிகிச்சை பெற்று  வருகிறார்கள்.  எனவே அவர்கள் உடல் நலத்தை கவனத்தில் கொள்ளுங்கள் என நீதிபதியிடம், வழக்கறிஞர் என். ஆர்.  இளங்கோ முறையிட்டார்.  மருத்துவ அறிக்கையையும் அவர் தாக்கல் செய்தார்.

அதைத்தொடர்ந்து  அமைச்சர் பொன்முடிக்கும், விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனை நீதிபதி  அறிவித்தார். 50 லட லட்சம் அபராதமும் விதித்தார்.  அமைச்சர் தண்டனை பெற்றதால் அவரது அமைச்சர் பதவி தானாக   காலியாகிறது. அத்துடன்  உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்வதற்காக 30 நாட்களுக்கு  இந்த  தீர்ப்பை நிறுத்தி வைப்பதாகவும் நீதிபதி உத்தரவிட்டார்.

தீர்ப்பை கேட்டதும் பொன்முடியும், விசாலாட்சியம் கண்ணீர் விட்டு அழுதனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!