Skip to content
Home » மக்களை பிரித்தாளுகிறது திமுக…. வேலூர் கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு

மக்களை பிரித்தாளுகிறது திமுக…. வேலூர் கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு

  • by Senthil

வேலூரில் இன்று காலை  பாஜக தேர்தல் பிரசார  பொதுக்கூட்டம் நடந்தது.  கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு வேலூர் தொகுதி பாஜக வேட்பாளர் ஏ.சி. சண்முகம்,  அரக்கோணம் தொகுதி பாமக வேட்பாளர்  வக்கீல் பாலு, தர்மபுரி பாமக வேட்பாளர் சவுமியா , கிருஷ்ணகிரிபாஜக நரசிம்மன்,  திருவண்ணாமலை  அஸ்வத்தாமன், ஆரணி கணேஷ்குமார்ஆகியோரை ஆதரித்து  பிரசாரம் செய்தார். அப்போது பிரதமர் மோடி ,  வணக்கம் என தமிழில் கூறிவிட்டு, இந்தியில் பேசியதாவது:

தமிழ்ப்புத்தாண்டு தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.  வரும் ஆண்டு வளமான ஆண்டாக அமையும். உங்கள் அன்பு, ஆசீர்வாதம் எனக்கு இருக்கிறது.  இந்த வேலூர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக  போராடிய மண்.   விண்வெளித்துறையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.

மீண்டும் மோடி அரசு  வரும் என தமிழகம் சொல்லிக்கொண்டிருக்கிறது.  கடந்த 10 ஆண்டுகளில்  பாஜக இந்தியாவுக்கு நல்ல அடித்தளம் அமைத்துள்ளது.2014க்கு முன் இந்தியாவை பலவீனமான நாடாக உலக நாடுகள் கருதின.உதான் திட்டத்தில் வேலூரில் விமான நிலைய பணிகள் விரைவில் முடியும்.  வேலூர் மக்களின் கோரிக்கைகளை மனதில் வைத்து பாஜக அரசு செயல்படுகிறது.

திமுக பழைய சிந்தனையில் உள்ளது.  ஒட்டு மொத்த திமுகவும்  திமுக குடும்ப அரசியல் ஆகிவிட்டது. இதனால் தமிழக இளைஞர்கள்  முன்னேற முடியவில்லை.   திமுகவில் போட்டியிட  நீங்கள் பெரிய குடும்பத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்,  ஊழல் செய்ய வேண்டும், தமிழ் கலாச்சாரத்தை எதிர்க்க வேண்டும்.  இந்த 3 தகுதிகள் வேண்டும். இதை த்தான்  செய்கிறது திமுக. ரூ.4600 கோடி இழப்பு ஏற்படும் அளவுக்கு மணல் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது.  திமுகவும், காங்கிரசும் குடும்பத்துக்கும், ஊழலுக்கும் முக்கியத்துவம் தருகிறது.

சின்ன குழந்தைகளை கூட  திமுக அரசால் காப்பாற்ற முடியவில்லை.  பள்ளிகளில் கூட போதை பொருட்கள் விற்கப்படுகிறது.   போதை பொருள் கடத்தல் தலைவன் எந்த குடும்பத்தோடு தொடர்பில் இருக்கிறான் தெரியுமா? திமுகவின் அரசியல் குறிக்கோள் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி. மக்களை மொழியின் பெயரால் பிரிக்கிறார்கள், ஜாதியின் பெயரால்  பிரிக்கிறார்கள். தொடர்ந்து திமுகவின் ஊழல்களை அம்பலப்படுத்துவேன்.

கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரசும், திமுகவும் கொடுத்து விட்டனர்.  இது யாரின் நலனுக்காக கொடுக்கப்பட்டது என்பது தெரியும். இதனால் இப்போது தமிழக மீனவர்கள் கச்சத்தீவு சென்றால் கைது செய்யப்படுகிறார்கள்.  மீனவர்கள் மீது பொய்யான அனுதாபம் காட்டுகிறது திமுக. இலங்கை கைது செய்யும் மீனவர்களை நாங்கள் விடுவித்து வருகிறோம்.  மீனவர்களுக்கு மட்டுமல்ல,  இவர்கள் தமிழ்நாட்டுக்கும் துரோகம் செய்தவர்கள்.

நான்  குஜராத் முதல்வராக இருந்தபோது இங்குள்ள  பொற்கோவிலுக்கு வந்துள்ளேன்.  பெண்களை இழிவுபடுத்துவதில் திமுகவும் இந்தி கூட்டணியும் ஒன்றுதான். அம்மா ஜெயலலிதாவை  இவர்கள் எப்படி நடத்தினார்கள் என்பது நமக்கு தெரியும். பெண்கள் சக்தியை நாங்கள் பாதுகாப்போம்.  வரும் 19ம் தேதி  பாஜக கூட்டணிக்கு அளிக்கும் வாக்கு தமிழகத்திற்கு உத்தரவாதமாக இருக்கும். இதை மோடியின் கியாரண்டியாக தெரிவித்துக்கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி, வணக்கம்.

இவ்வாறு அவர் பேசினார். பேசி முடித்ததும் வேட்பாளர்களை சந்தித்தார்.

கூட்டம் முடிந்ததும் பிரதமர் மோடி மேட்டுப்பாளையம் சென்று   பிற்பகலில்,  நீலகிரி, திருப்பூர், கோவை  பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!