உத்தர பிரதேச மாநிலம் ஷம்ளி மாவட்டத்தை சேர்ந்தவர் அக்ரம். இவர் மீது உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள காவல் நிலையங்களில் போக்சோ, திருட்டு, கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் 14 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், அக்ரம் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்து வந்தார். அவரை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். அக்ரம் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.50,000 பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, அக்ரம் உத்தரகாண்ட் மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி போலீசார் அங்கு சென்று குற்றவாளியை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று இரவு 1 மணியளவில் அக்ரம் மற்றும் அவரது கூட்டாளிகள், பிரேம்நகர் பகுதியில் உள்ளூர் காண்டிராக்டர் ஒருவரை துப்பாக்கி முனையில் மிரட்டி பணம் பறித்துள்ளனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்ய முயன்றனர். ஆனால் காரில் இருந்தவர்கள் போலீசாரைக் கண்டதும், காரில் இருந்து இறங்கி தப்பியோட முயன்றனர். மேலும், போலீசாரை நோக்கி அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
இதற்கு பதிலடியாக போலீசார் நடத்திய என்கவுண்டரில், ஒருவர் படுகாயமடைந்தார் அதே சமயம், மற்றவர்கள் தப்பியோடினர். படுகாயமடைந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்த விசாரணையில், உயிரிழந்த நபர் போலீசாரால் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த குற்றவாளி அக்ரம் என்பது தெரியவந்தது.
அக்ரம் தரப்பினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் காவலர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திலிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி, கைத்துப்பாக்கி மற்றும் ரூ. 2 லட்சம் பணத்தை போலீசார் மீட்டனர். குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, தப்பியோடிய அக்ரமின் கூட்டாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
