பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை.. குடும்ப தகராறில் விபரீதம்
திருச்சி மாவட்டம், ஜியாபுரம் அருகே கம்பரசம்பேட்டை பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிச்சைமணி மகன் சின்னமுத்து (வயது 35). பெயிண்டரான இவருக்குக் கடுமையான மதுப்பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவருக்கும், அவரது மனைவி சிநேகாவிற்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் இவர்களுக்குள் மீண்டும் கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சின்னமுத்து கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று சின்னமுத்து கம்பரசம்பேட்டை அக்ரஹாரம் பகுதியில் உள்ள கிருஷ்ணகுமார் என்பவரது வீட்டில், யாரும் இல்லாத நேரத்தில் அறையின் கூரையில் கேபிள் ஒயரால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஜியபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து அவரது மனைவி சிநேகா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முசிறி டாஸ்மாக் கடையில் ரகளை .. வாலிபருக்கு அரிவாள் வெட்டு:
திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா, கீழ சந்தப்பாளையம் குடிதெருவைச் சேர்ந்தவர் முனியப்பன் (29). இவரது ஊரில் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி சம்பவத்தன்று இரவு 8 மணி அளவில் முனியப்பன் மது வாங்குவதற்காக முசிறியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்குச் சென்று வரிசையில் நின்றுள்ளார். அப்போது அங்கு வந்த மங்காரைப்பேட்டையைச் சேர்ந்த சதீஷ்குமார் (38) என்பவர், வரிசையில் நிற்காமல் முன்னால் புகுந்து செல்ல முயன்றுள்ளார்.
இதனை வரிசையில் நின்ற முனியப்பன் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்குமார், முனியப்பனை அசிங்கமாகத் திட்டி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரது தலையில் பயங்கரமாக வெட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த முனியப்பனை அங்கிருந்தவர்கள் மீட்டு முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து முனியப்பன் அளித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் சதீஷ்குமார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் மீது தாக்குதல்…
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தாலுகா, தச்சங்குறிச்சியைச் சேர்ந்தவர் டேவிட்ராஜ் மகன் மெல்வின் (2). இவர் சமயபுரம் நாலு ரோடு புல்லம்பாடி வாய்க்கால் பாலம் அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மண்ணச்சநல்லூர் தாலுகா, மகாளிகுடி ஹரிஜன தெருவைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் நந்தகுமார் (25), கண்ணன் மகன் பிரதாப் (21) மற்றும் தனுஷ் ஆகிய 3 பேரும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் அஜாக்கிரதையாகவும், வேகமாகவும் ஓட்டி வந்துள்ளனர்.
இதனை மெல்வின் கண்டித்து, ஏன் இப்படி ஓட்டுகிறீர்கள் எனக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நந்தகுமார், பிரதாப், தனுஷ் ஆகிய 3 பேரும் சேர்ந்து மெல்வினை அசிங்கமாகத் திட்டி, கைகளாலும் அங்கிருந்த கற்களாலும் சரமாரியாகத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் அவரது கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த மெல்வின் சமயபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மெல்வின் அளித்த புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
