பொன்மலையில்
தொழிலாளிடம் பணத்தை பறித்த ரவுடி கைது..
திருச்சி பொன்மலை முன்னாள் ராணுவ வீரர்கள் காலனி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 46) இவர் தச்சு தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த 17 ந்தேதி பொன்மலை ஆர்மரி கேட் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பொன்மலைப்பட்டி கீழ உடையார் தெருவை சேர்ந்த ரவுடி பிராங்கிளின் ஜோசப் ராஜ் (வயது31) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி, அவரிடமிருந்து ரூபாய் ஆயிரத்தை பறித்து சென்றார். இதுகுறித்து அவர் பொன்மலை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிராங்கிளின் ஜோசப் ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இலங்கை அகதிகள் முகாமில்
வாலிபரை தாக்கிய மூன்று பேர் கைது
திருச்சி ஜுலை 19-
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியை சேர்ந்தவர் பிரதீபன் (வயது 31) இவர் திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்பில் ராஜ்குமார் என்பவர் உடன் செட் அமைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த 17ந் தேதி இவர் அங்கு அமர்ந்திருந்த போது, அதே முகாம்மை சேர்ந்த 4 பேர் வந்தனர். அப்போது அவர்கள் மது போதையில் பிரதீபனிடம் தகராறு செய்து, அவரை தகாத வார்த்தைகள் திட்டி மரக்கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த பிரதீபன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கே.கே. நகர் போலீசில் புகார் அளித்தார். புகரரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த முகாமை சேர்ந்த சந்தோஷ் பிரியன்( வயது24 ), அர்ஜுனன் (வயது19) , ஹரி சரவணன் (வயது24) ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கார்த்திக் என்பவரை தேடி வருகின்றனர்.
திருச்சியில்
இருசக்கர வாகனத்தை திருடிய சிறுவன் கைது
திருச்சி ஜூலை 19-
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் காளியப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 38) இவர் திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையத்தில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லை இதையடுத்து மர்ம நபர்கள் இரு சக்கர வாகனத்தை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து பிரபு எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த திருட்டில் ஈடுபட்ட சோமரசம்பேட்டை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவனை கைது செய்தனர். பின்னர் அந்த சிறுவனை தஞ்சையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர்.
திருச்சியில்
பரபரப்பு சம்பவம்
அரிசி கடையின் பூட்டை உடைத்து ரூபாய் 50 ஆயிரம் பணம் திருட்டு
மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு
திருச்சி ஜூலை 19-
திருச்சி சின்னக்கடை வீதி பாபு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் காதர் ஒலி ராவுத்தர் (வயது 70) இவர் திப்பிரான் தொட்டி தெருவில் அரிசி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த 17 ந்தேதி தனது கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது கடையின் கல்லாப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 50 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து அவர் கோட்டை போலீசில் புகார் அளித்தார் . அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேகே நகரில்
ஒட்டல் ஊழியர் மயங்கி விழுந்து சாவு
திருச்சி ஜுலை 19-
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பிரான்சினா காலனியை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 73 ) இவர் கே.கே. நகர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.இவர் கடந்த 16ந் தேதி வேலைக்கு சென்று ஓட்டலில் தங்கியுள்ளார். இந்த நிலையில் கடந்த 18 ந் தேதி காலை ஹோட்டலில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்து டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கே.கே. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனியார் கம்பெனியில் இன்சூரன்ஸ் ஏஜென்ட் மயங்கி விழுந்து சாவு
திருச்சி சிந்தாமணி பூசாரி தெருவை சேர்ந்தவர் மனோகர் (வயது 58) இவர் கரூர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் கம்பெனியில் இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 17 ந் தேதி இவர் திடீரென மயக்கம் மயங்கி விழுந்தார். இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி மனோகர் உயிரிழந்தார். இது குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவரங்கத்தில்
கஞ்சா விற்ற ரவுடி கைது
திருச்சி திருவரங்கம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த திருவானைக்கோவில் மேல கொண்டையம்பேட்டை பகுதியை சேர்ந்த ரவுடி ராஜேஷ் கண்ணா (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது
வெவ்வேறு சம்பவங்களில்
திருச்சியில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த மூன்று பேர் கைது
திருச்சி எடமலைப்பட்டி புதூர் பாரதி தெரு அருகே புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அப்பகுதிக்கு ரோந்து சென்றனர். அப்போது அங்கு புகையிலை பொருட்களை விற்றுக் கொண்டிருந்த கொல்லங்குளம் பகுதியை சேர்ந்த யோகாவன் (வயது 23) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதே போல் திருச்சி ஹீபர் ரோடு சாலையில் புகையிலை பொருட்கள் விற்றதாக பொன்நகர் காமராஜபுரம் பகுதியை சேர்ந்த வினோத் (வயது38) என்பவரை செசன்ஸ் கோர்ட் போலீசார் கைது செய்தனர். இதேபோல் திருச்சி உறையூர் வாத்துக்காரர் தெருவில் புகையிலை பொருட்கள் விற்றதாக உறையூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ஸ்ரீதர் (வயது23) என்பவரை உறையூர் போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து மொத்தம் 100 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
காந்தி மார்க்கெட்டில்
லாட்டரி சீட்டு விற்றவர் கைது
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக காந்தி மார்க்கெட் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது மீன் மார்க்கெட் அருகே லாட்டரி சீட்டுகள் விற்றுக் கொண்டிருந்த இ.பி. ரோடு அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பெரியண்ணசாமி (வயது 33) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் ரூபாய் 300 பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
