Skip to content
Home » 3வது டெஸ்ட்……. சதம் விளாசினார் ரோகித்

3வது டெஸ்ட்……. சதம் விளாசினார் ரோகித்

இந்தியா –  இங்கிலாந்து இடையேயான 3 வது டெஸ்ட்  குஜராத் மாநிலம் ராஜ்கோட் டில் இன்று காலை தொடங்கியது.  டாஸ் வென்ற இந்திய அணி,  ராஜ்கோட் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது என்பதால், முதலில்  பேட்டிங்  எடுத்தது..  ரோகித் , ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.  இந்திய அணியின் இளம் வீரர்களான ஜெய்ஸ்வால் 10 ரன்களிலும், சுப்மன் கில் டக் அவுட்டாகியும், பட்டிதர் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதன்பின் ரவீந்திர ஜடேஜா 5வது பேட்ஸ்மேனாக மாற்றி களமிறக்கப்பட்டார். அவருடன் இணைந்து ரோகித் சர்மா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒருபக்கம் ஜடேஜா எந்த ரிஸ்கும் எடுக்காமல் பேட்டிங் செய்ய, இன்னொரு பக்கம் ரோகித் சர்மா பவுண்டரிகள் மூலம் இந்திய அணி ஸ்கோரை உயர்த்தினார். ஒரு கட்டத்தில் பிட்சில் எந்த உதவியும் பவுலர்களுக்கு கிடைக்கவில்லை என்பதை அறிந்து, இருவரும் ரன் குவிப்பில் ஈடுபட்டனர். சிறப்பாக பேட்டிங் செய்த ரோகித் சர்மா 71 பந்துகளில் அரைசதம் அடிக்க, உணவு இடைவேளையும் போது இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 93 ரன்கள்சேர்த்தது.

உணவு இடைவேளைக்கு பின்னர்  இந்திய பேட்ஸ்மேன்கள் இருவரும் கூடுதல் வேகத்துடன் ரன்களை சேர்க்க தொடங்கினார்கள்.டாம் ஹார்ட்லி வீசிய பந்தில் ரோகித் சர்மா சிக்சர் அடிக்க, ஆட்டம் இந்திய அணியின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. இவர்களின் பார்ட்னர்ஷிப் 100 ரன்களை கடந்த நிலையில், ஜடேஜா 97 பந்தில் அரைசதம் கடந்தார். இதையடுத்து ரோகித் சர்மா தனது பாணியில் ரன்களை குவிக்க தொடங்கினார்.

2வது செஷன் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 185 ரன்கள் சேர்த்தது. கேப்டன் ரோகித் சர்மா 97 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதன்பின் கடைசி செஷன் தொடங்கிய நிலையில் ரெஹான் அஹ்மத் வீசிய முதல் ஓவரின் 3வது பந்திலேயே சதம் விளாசி அசத்தினார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா அடிக்கும் 11வது சதம் இதுவாகும். இங்கிலாந்து அணிக்கு எதிராக 3வது சதமாகும். 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறிய போது, கேப்டனாக முன் நின்று இந்திய அணியை வழிநடத்தி சென்றுள்ளார் ரோகித் சர்மா. இதன் மூலம் தன் மீதான விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்துள்ளார்.

ரோகித் 131 ரன்கள் எடுத்தபோது கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவருக்கு பதில் இன்று முதன் முதலாக  டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான சர்ப்ராஸ் கான் களம் இறக்கப்பட்டார். அவரும் நிதானமாக ஆடுகிறார். 67 ஓவர் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா 87 ரன்களுடனும், சர்ப்ராஸ் கான் 4 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!