Skip to content
Home » அமலாக்கத்துறை சித்ரவதை….நூலிழையில் உயிர்தப்பிய செந்தில்பாலாஜி….ஆர்.எஸ்.பாரதி பகீர்

அமலாக்கத்துறை சித்ரவதை….நூலிழையில் உயிர்தப்பிய செந்தில்பாலாஜி….ஆர்.எஸ்.பாரதி பகீர்

திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கிராப்பட்டி பகுதியில் நடைபெற்றது. இதில் தி.மு.க முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு, தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது:

தமிழகத்திற்கு பெட்டி தூக்கிட்டு வந்தவன்  எல்லாம் , ஆட்சியை குறை கூறினால் திமுக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. காமராஜர் பிரதமர் ஆவதை திமுக தடுத்தது என்று அண்ணாமலை பேசிவருகிறார். காமராஜர் பிரதமர் பதவியை ஒருநாளும் விரும்பவில்லை. நேருவின் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஒருத்தர் பிரதமராக வரவேண்டும் என விரும்பியவர் காமராஜர். டில்லியில் 1966 ம் ஆண்டு காமராஜர் வாழ்ந்த வீட்டை தீ வைத்த கொளுத்தி அவரை கொல்ல முயன்றவர்கள் அன்றைய ஜன சங்கத்தினர், இன்றைய பா.ஜ.க வினர் என்பதை யாரும் மறந்துவிட முடியாது. அங்கிருந்த திமுக தொண்டன் கோதண்டபானி என்பவர் வீட்டுக்குள் புகுந்து காமராஜரை காப்பாற்றி உள்ளார்.  காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் கருணாநிதி. கலைஞர் வழியில் காமராஜரின் பிறந்த நாளான ஜூலை 15ம் தேதி, தமிழகம்  முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை தமிழக முதல்வர்  ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது போடப்பட்டுள்ள வழக்கு அயோக்கியத்தனமானது. அவரை கைது செய்த போது மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளது. நீதிமன்றமும்  அதை உறுதி செய்துள்ளது. அவருக்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டதால், அவர் உயிர் பிழைத்தார். இல்லையென்றால் அவர்கள் செய்த சித்திரவதையில் உயிரிழந்திருப்பார். அவருக்கு நாம் இரங்கல் தீர்மானம் தான் வாசித்திருக்க வேண்டியிருக்கும். அதில் இருந்து அவர் தற்போது தப்பித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் 70 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்ததாக அஜித் பவார் மீது வழக்கு உள்ளது. அவர் பா.ஜ.க விற்கு சென்ற உடன் அங்கே இருக்கும் ஆளுநர் அவருக்கு துணை முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார். ஆனால் இங்கே உள்ள ஆளுநர் உயர் நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்ட ஒரு வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். செந்தில் பாலாஜி வழக்கில் இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகளும் வெவ்வேறு தீர்ப்பு கூறினாலும், அவர்கள் இருவரும் அமலாக்கத்துறை கஷ்டடி கேட்க அதிகாரம் இல்லை என்பதை கூறி உள்ளார்கள். இதன் மூலம் அமலாக்கத்துறை, அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த முடியாது என்பது உறுதியாகிறது. தி.மு.க விடம் சட்ட ரீதியாக மோதியவர்கள் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை. அது ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பியது முதல் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் வாங்கியது வரை திமுக வின் சட்டத்துறையே வென்றுள்ளது. எங்களிடம் மோதி ஒரு போதும் யாரும் வெற்றி பெற முடியாது.

தி.மு.க தொண்டர்கள் கட்சிக்கு ஒரு சோதனை என்றால் பார்த்து கொண்டு அமைதியாக இருக்க மாட்டார்கள். முதலமைச்சர் பெங்களூர் சென்றால் தடுப்போம் என அண்ணாமலை கூறி உள்ளார். அண்ணாமலைக்கு துணிச்சல் இருந்தால், ஆண் மகனாக இருந்தால், சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுபவர்  என்றால், முதலமைச்சரை தடுத்து பார்க்கட்டும், திமுகவினர் யார் என்று அப்போது தெரியும்.

இவ்வாறு ஆர்.எஸ். பாரதி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!