Skip to content
Home » சிசோடியா கைது…. உச்சநீதிமன்றம் இன்று மாலை விசாரணை

சிசோடியா கைது…. உச்சநீதிமன்றம் இன்று மாலை விசாரணை

மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் டில்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவை சிபிஐ கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிரடியாக கைது செய்தது. விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ சம்மன் அனுப்பிய நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை டில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் மணிஷ் சிசோடியா ஆஜரான நிலையில் அவரிடம் 9 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

விசாரணைக்கு பின் மணிஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிசோடியாவை வரும் 4-ம் தேதி வரை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்கடில்லி ரோஸ் அவனியூ சிபிஐ சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து, மணிஷ் சிசோடியா தற்போது சிபிஐ காவலில் உள்ளார்.

இந்நிலையில், சிபிஐ தன்னை கைது செய்ததை எதிர்த்து மணிஷ் சிசோடியா சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை அவசர வழக்காக ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு இன்று மாலை விசாரணை நடத்த உள்ளது.

மணிஷ் சிசோடியா கைது தொடர்பான வழக்கின் முழு விவரம்: டில்லியில் 2021-22-ம் ஆண்டுக்கான மதுபானக்கொள்கை 2021-ம் ஆண்டு ஜூலை 5-ந் தேதி வெளியிடப்பட்டது. அதில் இடம் பெற்றிருந்த வரிக்குறைப்பு உள்ளிட்ட சலுகைகள் பற்றிய ரகசிய தகவல்கள் முன்கூட்டியே கசியவிடப்பட்டு, அதன் மூலம் மதுபான ஆலை அதிபர்கள், விற்பனையாளர்கள் கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்ததாகவும், இதற்கு பிரதிபலனாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரத்தில் டில்லி துணை நிலை கவர்னர் வி.கே. சக்சேனா, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து இந்த ஊழலில், சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஊழலில், மதுபானக்கொள்கையை வகுத்த கலால் துறைக்கு பொறுப்பேற்றவர் என்ற வகையில், டில்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவின் பெயரும் பலமாக அடிபட்டு வந்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அவருக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனைகளை நடத்தியது. அதைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் 17-ந் தேதி அவரிடம் சி.பி.ஐ. விசாரணையும் நடத்தியது.  தொடர்ந்து டிசம்பர் மாதம் டெல்லி யூனியன் பிரதேச அரசின் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நுழைந்து அங்கும் சி.பி.ஐ. சோதனை நடத்தியது.

இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று ஆம் ஆத்மி கட்சி கூறி, குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வந்தது. இந்த ஊழலில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவின் மகள் கவிதாவின் பெயரும் அடிபட்டது. அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவரது முன்னாள் ஆடிட்டர் புட்சிபாபு கோரண்ட்லா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மணிஷ் சிசோடியாவிடம் கடந்த 19-ந் தேதி மீண்டும் நேரடி விசாரணை நடத்துவதற்காக சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் அவகாசம் கோரினார். ஒரு வார காலம் அவகாசம் வழங்கப்பட்டது.

அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ( 26-ம் தேதி) நேரில் ஆஜராக சி.பி.ஐ. மீண்டும் சம்மன் அனுப்பியது. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலை மணிஷ் சிசோடியா சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜரானார். மணிஷ் சிசோடியாவிடம் மதுபானக் கொள்கையின் அம்சங்கள, மதுபான வியாபாரிகளுடனான அவரது தொடர்பு மற்றும் சாட்சிகள் அளித்த வாக்குமூலங்கள் அடிப்படையில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த கேள்வித்தாள்படி துருவித்துருவி கேள்விகள் கேட்டு, பதில்களைப் பெற்று பதிவு செய்தனர். இந்த விசாரணை 9 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. விசாரணை முடிவில் மணிஷ் சிசோடியாவை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!