Skip to content
Home » முடக்க பார்த்தனர்…..மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை நிறைவேற்றிகாட்டுவோம்…. ஸ்டாலின் சூளுரை…..

முடக்க பார்த்தனர்…..மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை நிறைவேற்றிகாட்டுவோம்…. ஸ்டாலின் சூளுரை…..

குடும்ப  தலைவிகளுக்கு மாதம்   ஆயிரம் ரூபாய் செலுத்தும்  மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 15ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் வாயிலாக முதல்கட்டமாக சுமார் ஒரு கோடி மகளிர் வங்கி கணக்கில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை நேரடியாக செலுத்தப்பட உள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை பதிவு செய்யவும், பின்னர் அதனை பதிவேற்றம் செய்வதற்கும் தமிழ்நாடு முழுவதும் 35 ஆயிரத்து 923 முகாம்கள் அரசு சார்பில் நடத்தப்பட உள்ளன. இதில் தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் பெற வந்த  குடும்பத்தலைவிகள் சுமார் 20 பேரிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாடினார். அப்போது அந்த  பெண்கள் தங்கள் குடும்ப சூழ்நிலைநிலைகளையும், இந்த பணம் ரூ.1000  என்பது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறினர்.

35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்   இந்த முகாமில் என்னையும் அழைத்து வந்து உங்களை பார்க்கவும், உங்களோடு பேசவும் வாய்ப்பு கிடைத்ததே எனக்கு மிகப்பெரிய சந்தோஷம்.  உங்களை பார்டத்து கடவுளைப்பார்த்தது போல இருக்கிறது என்று கூறினார்.

இதைக்கேட்ட முதல்வர் ஸ்டாலின் சிரித்தார்.  இதை நீங்களாக சொல்கிறீர்களா, யாரும் சொல்லிக்கொடுத்து தான் சொல்கிறீர்களா என  முதல்வர் கேட்டதும், அந்த பெண் நானாகத்தான் சொல்கிறேன். என் மனதில் பட்டதை சொல்கிறேன் என்ற  உவகையுடன்

கூறினார்.

பின்னர் அருகில் அமைக்கப்பட்ட விழா மேடைக்கு முதல்வர் ஸ்டாலின் சென்று  விண்ணப்பங்களை வழங்கி  விழாவை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:34  ஆண்டுகளுக்கு முன்1989ல்  அப்போதைய முதல்வர் கருணாநிதி தர்மபுரியில் தான் மகளிர் சுய உதவிக்குழுவை தொடங்கினார்.  பெண்கள் தன்மானத்தோடு, சுயமரியாதையோடு, தங்கள் சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதற்காக  இந்த சுயஉதவிக்குழுவை கலைஞர் தொடங்கினார்.

தர்மபுரியில் தொடங்கப்பட்ட இந்த அற்புதமான திட்டம் , கலைஞர் விதைத்த அந்த விதை இன்று வளர்ந்து, தழைத்து பெண்கள் வாழ்வில் ஒளி ஏற்படுத்தி உள்ளது.  இன்று 4 லட்சத்து 57 ஆயிரம் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் தமிழகத்தில் செயல்படுகிறது.   அவர்களுக்கு 25ஆயிரத்து 641 கோடி  சுழல் நிதி வழங்கப்பட்டது.

மகளிர் சுயஉதவிக்குழு என்ற  சிறப்பான அந்த திட்டத்திற்கு விதைப்போட்ட மண் தான் தர்மபுரி மண்.தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் 8 ஆயிரம் சுயஉதவிக்குழுக்கள் உள்ளன. அதற்கு கடந்த ஆண்டு மட்டும் ரூ.251 கோடி நிதி வழங்கி உள்ளோம்.  தர்மபுரியில் விதை விதைத்தாலர், தமிழ்நாடு முழுவதும் முளைக்கும்.

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினாகிய நான்  பதவியேற்றதும் கோட்டைக்கு வந்து முதல் கையெழுத்தாக போட்டது மகளிர்  இலவச பஸ் பயணம்    கோப்பு தான்.  இதன் மூலம் 36 லட்சம் பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். அவர்களுக்காக போக்குவரத்து கழகத்துக்கு அரசு ரூ.83 கோடி வழங்குகிறது. கடுமையான நிதி நெருக்கடியிலும் இதனை அமல்படுத்தினோம்.  இதனால் ஒவ்வொரு பெண்ணும் மாதம் ரூ.800 முதல் ரூ.1000 வரை மிச்சப்படுத்துகிறார்கள்.

அதைத்தொடர்ந்து  புதுப்பெண் திட்டம் தொடங்கினோம்.  உயர்கல்விக்கு செல்லும்  மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குகிறோம். இந்த திட்டத்தில் தர்மபுரியில் மட்டும் 11,250 பேர் பயனடைகிறார்கள்.  அதைத்தொடர்ந்து கலை உணவுத் திட்டம் தொடங்கினோம். இந்த திட்டத்தில் இப்போது 2 லட்சம் மாணவர்கள் மட்டும் பயனடைகிறார்கள். வரும் காலத்தில் இந்த திட்டம் விரிவாக்கப்பட்டு  18 லட்சம் பேர் பயனடையும் வகையில் செல்படுத்தப்படும்.

1929ல் செங்கல்பட்டு திக மாநாட்டில் பெண்களுக்கு சொத்துரிமை வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அதை திமுக ஆட்சிக்கு வந்தபிறகு 89ல் கருணாநிதி சட்டமாக்கினார்.  அந்த வகையில் அடுத்த கட்டம் தான் கலைஞர் மகளிர்  உரிமைத்தொகை வழங்கும் திட்டம். பெண்களின் உழைப்பை அங்கீகரிக்க இந்த  தொகை வழங்கப்படுகிறது. இது அவர்களுக்கு இலவசமாக வழங்கப்படவில்லை. இது அவர்களது உரிமை.

நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது கடுமையான நிதி நெருக்கடி. கொரோனா தொற்று வேறு. அதனால் இதனை கொடுக்க தாமதமாயிற்று”.  நிதிநிலைமையை ஓரளவு சமாளித்து இப்போது கொடுக்கிறோம். இதை  சிலரால் தாங்கிகொள்ளமுடியவில்லை. இந்த திட்டத்தை கொச்சைப்படுத்தி முடக்க நினைக்கிறார்கள்.  இதை நிறைவேற்றிக்காட்டுவோம். அது தான் ஸ்டாலின் பாணி. இதுதமிழக மக்களுக்கு தெரியும்.

சட்டமன்ற கூட்டத்தில்  யாருக்கெல்லாம் இதை வழங்குவீர்கள் என்றார்கள். யாருக்கெல்லாம் இந்த பணம் அவசியம் தேவையோ அவர்களுக்கெல்லாம் வழங்குவோம் என்றேன். இதற்காக ரூ.7 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.  அடுத்த நிதி ஆண்டில் ரூ.12 ஆயிரம் கோடி வழங்கப்படும்.  மாதந்தோறும் இந்த பணம் வங்கி கணக்குக்கு வந்து விடும்.  இது உங்கள் உரிமைத்தொகை. அதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

இந்த முகாம்களில் தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு பெண்களின் செல்போன்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். இதுபோன்ற திமுக அரசின் சாதனைகள் இன்னும் தொடரும், தொடரும். தொடரும்

இவ்வாறு அவர் பேசினார். விழாவில் அமைச்சர்கள் கே.என். நேரு, பன்னீர்செல்வம்,  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!