Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி அரசு மருத்துவமனையில் திடீர் மின் தடை- நோயாளிகள் அவதி

திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஏற்பட்ட திடீர் மின்தடையால் சிகிச்சை பெற்று வரும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

தமிழகத்தின் முக்கிய மருத்துவ மையமாகத் திகழும் திருச்சி அரசு மருத்துவமனைக்குத் திருச்சி மட்டுமின்றி அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும் உள்நோயாளிகளாகவும் நூற்றுக்கணக்கானோர் தங்கிச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை மருத்துவமனை வளாகத்தில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லாததால் வார்டுகளில் இருந்த நோயாளிகள் புழுக்கத்தாலும், இருளாலும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
மேலும் ஒரு மணி நேரத்திற்குப் பிறகும் மின்சாரம் சீராகாமல் தொடர்ந்து விட்டு விட்டு வந்ததால் மருத்துவமனை அறைகளுக்குள் இருக்க முடியாமல் நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் மருத்துவமனை வளாகத்தில் ஆங்காங்கே திறந்த வெளியில் அமர்ந்து இருந்தனர்.
அவசர சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் முக்கிய வார்டுகளில் மாற்று மின் ஏற்பாடுகள் முறையாகச் செயல்படுத்தப்படாததே இந்த அவலத்திற்குக் காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உயிர்காக்கும் மருத்துவமனைகளில் இனி இதுபோன்ற மின்தடை ஏற்படாத வண்ணம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகளின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!
Secret Link