Skip to content
Home » மினரல் வாட்டர் கேனில் நீந்தி விளையாடிய தவளை…….. பொதுமக்கள் அதிர்ச்சி…

மினரல் வாட்டர் கேனில் நீந்தி விளையாடிய தவளை…….. பொதுமக்கள் அதிர்ச்சி…

  • by Senthil

மயிலாடுதுறை நகராட்சி தருமபுரம் சாலையில் குடிநீரை சுத்திகரித்து விற்பனை செய்யும் நிறுவனம் உள்ளது. இங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை 7 ரூபாய், 10 ரூபாய், 20 ரூபாய், 40 ரூபாய், என பிளாஸ்டிக் பாட்டில்களிலும், 20 லிட்டர் வாட்டர் கேன்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை மிகப்பெரிய அளவில் விற்பனை  செய்யப்படுகிறது.

இந்நிலையில் மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள மளிகை கடை ஒன்றில் பொதுமக்கள் வாங்கிய வாட்டர் கேனில் உயிருடன் தவளை இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் நகராட்சி உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டதன் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் புஷ்பராஜ் நேரில் வந்து பார்வையிட்டார். வாட்டர் கேன் மூடி பிரிக்கப்பட்டதால் குடிநீர் தயாரிக்கும் நிறுவனத்திற்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொள்ள முடியாது என்றும் நேரிடையாக ஆய்வு செய்கிறேன் என்று கூறி குடிநீர் கேன் வாங்கப்பட்ட மளிகை கடையில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன

அலுவலர் புஷ்பராஜ் மற்றும் நகராட்சி சுகாதாரத்துறை அலுவலர் சீனிவாசன் ஆய்வு மேற்கொண்டனர். வாட்டர் கேனில் தண்ணீர் நிரப்பப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதி குறிப்பிடாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. காலாவதியான தேதி குறிப்பிடாமல் உள்ள வாட்டர் கேனை வாங்கி விற்பனை செய்யகூடாது என்று மளிகைகடைகாரரை அதிகாரி எச்சரித்தார். தொடர்ந்து வாட்டர் கேன் நிறுவனத்திற்கு நேரடியாக சென்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு மினி லாரியில் ஏற்றப்பட்டிருந்த வாட்டர் கேன்களில் உற்பத்தி மற்றும் காலாவதியான தேதி குறிப்பிடாமல் கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைப்பது தெரியவந்தது.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீரில் தவளை வருவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் தண்ணீர் நிரப்பப்படாத வாட்டர் கேன்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள இடத்தில் தவளை உள்ளே நுழைந்து இருக்கும் என்று கூறிய அலுவலர் கட்டிடத்தை ஆய்வு செய்தபோது காலி கேன்கள் உள்ள இடத்தில் தவளைகள் நத்தை மரவட்டை இருந்தது தெரியவந்தது. உடனடியாக நிறுவனத்தில் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிகாரி  புஷ்பராஜ் உத்தரவிட்டார்.

இச்சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு பதில் அளிக்க நோட்டிஸ் வழங்கி அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேனில் தவளை உயிருடன் இருந்த சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உற்பத்தி செய்யப்பட்ட தேதி மற்றும் காலாவதியான தேதி குறிப்பிடப்படாமல் விற்பனைக்கு வரும் பொருட்களை வியாபாரிகள் வாங்கி விற்பனை செய்யக்கூடாது என்றும். காலாவதியாகும் தேதியை பார்த்து நுகர்வோர் பொருட்களை வாங்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!