Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வாகனம் மீது ஆட்டோ மோதி 3 பேர் உடல் நசுங்கி பலி… 3 பேருக்கு தீவிர சிகிச்சை

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்யசென்றபோது முன்னாடி சென்ற வாகனம் மீது ஆட்டோ மோதியதில் சென்னையை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக பலியானார்கள். இது பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொடுங்கையூர் தியாகராய நகர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (42). இவர் ஆட்டோ ஓட்டி வருகின்றார். இவரின் மனைவி பூங்கொடி (39). இவர்களது மகள் தனலட்சுமி (10). இவர்களது உறவினர்கள் ராதா (65), கோகுல் (10), பிரசாந்த் (15). இவர்கள் அனைவரும் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக நேற்றிரவு சென்னையில் இருந்து ஆட்டோவில் சென்றுள்ளனர். லோகநாதன் ஆட்டோவை ஓட்டியிருக்கிறார்.

பெரியபாளையம் அருகே உள்ள பனப்பாக்கம் கிராமம் எம்டிசி நகர் பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது முன்னால் சென்ற ஒரு வாகனம் திடீரென நின்றதாக தெரிகிறது. இதன்காரணமாக அந்த வாகனம் பின்புறம் ஆட்டோ வேகமாக மோதியதில் நொறுங்கியது. இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த அனைவரும் படுகாயம் அடைந்த கூச்சல் போட்டுள்ளனர். விபத்தை பார்த்ததும் சாலையில் சென்றவர்கள் வந்து ஆட்டோவில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் பெரியபாளையம் காவல்நிலைய போலீசார் விரைந்துவந்தனர். நொறுங்கிய ஆட்டோவுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டபோது மூதாட்டி ராதா, கோகுல் மற்றும் பூங்கொடி ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேரை உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, 3 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!