Skip to content
Home » மதுரையில் டிஎம்எஸ் சிலை….. இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் திறக்கிறார்

மதுரையில் டிஎம்எஸ் சிலை….. இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் திறக்கிறார்

தமிழ் சினிமா வரலாற்றில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசீகர குரலால் ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்த பழம் பெரும் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 11 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். 1922-ம் ஆண்டு மார்ச் 24-ந்தேதி மதுரையில் பிறந்த அவர் காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் இசை பயிற்சி பெற்று மேடைக்கச்சேரிகளில் பாடி வந்தார். 1950-ம் ஆண்டு சினிமாவில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் தொடங்கி 1970-ம் ஆண்டுகளில் டி.ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான ஒருதலை ராகம் திரைப்படத்தின் நாயகன் வரை, பல்வேறு தலைமுறையைச் சேர்ந்த நடிகர்களுக்கும் பாடல்கள் பாடியிருக்கிறார்.

சுமார் 65 ஆண்டுகள் அவர்தன்னுடைய இசை பயணத்தை தொடர்ந்து வந்தார். 2013-ம் ஆண்டு, தனது 91-வது வயதில் டி.எம். சவுந்தரராஜன் சென்னையில் காலமானார். அவரது நூற்றாண்டு விழாவையொட்டி சென்னையில் அவர் வாழ்ந்த வீடு அமைந்திருக்கும் மந்தவெளி வெளிவட்ட சாலை பகுதிக்கு டி.எம்.சவுந்தரராஜன் சாலை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டினார். மேலும் அவரது புகழுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி மதுரையில் முழு திருவுருவச்சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

மதுரை தெற்கு வட்டம் முனிச்சாலை சந்திப்பு பகுதியில் உள்ள மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டலம் (பழைய) அலுவலகக் கட்டிட வளாகத்தில் பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் முழு திருவுருவச் சிலை அமைத்திட மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பரிந்துரை செய்யப்பட்டு பொதுப்பணித்துறையின் மூலம் ரூ.50 லட்சம் செலவில் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழா இன்று மாலை நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் முதல்வர், டிஎம்எஸ் சிலையை திறந்து வைத்து பேசுகிறார்.  இரவில் மதுரையில் தங்குகிறார்.  நாளை முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை செல்கிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!