Skip to content
Home » உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி….100 கோடி இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது

உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி….100 கோடி இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது

  • by Senthil

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இந்த ஆண்டு இந்தியா நடத்தியது. கடந்த அக்டோபர் மாதம் 5ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி அரங்கில்  முதல் போட்டி நடந்தது..  இறுதிப்போட்டியும் நேற்று  அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தான்  நடந்தது. இதில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின,

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இதில் சுப்மன் கில் 4 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். ரோகித் சர்மா 47 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி(54 ரன்கள்) சற்று நிதானமாக ஆடி அரை சதத்தைக் கடந்தார். ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

கே.எல்.ராகுல் 66 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியாக இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியில் சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர்,  கே.எல். ராகுல் ஆகியோரின் மோசமான ஆட்டமே  தோல்விக்கு அடித்தளம் இட்டது. 240 ரன் என்பது  இறுதிப்போட்டிக்கு வெற்றிக்கு எந்த விதத்திலும் உதவாது என்பதை அனைவரும் கணித்து விட்டனர்.

கேப்டன்,  கோலி தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் பொறுப்பற்ற ஆட்டமே தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது.  கே. எல். ராகுல்  40 பந்துகளை டாட் பால் ஆடி  இந்திய வெற்றியை ேடுத்தார். அதுபோல் கில், ஐயர் ஆகியோரும் இறுதிப்போட்டி என்பதை மனதளில் கூட நினைக்காதவர்களாய்  வந்தோம், போனோம் என பெவிலியன் திரும்பினர்.  சூர்யகுமார் யாதவ்  டி 20க்கு தான் உதவுவாரே தவிர  ஒரு நாள் போட்டிக்கு அவர்  சிறந்த பேட்ஸ்மேன் இல்லை என்பதை  அவரே உணர்த்தி விட்டார்.

240 ரன்கள் என்ற எளிய ஸ்கோர் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு எப்படி உற்சாகம் தந்ததோ அதே அளவில் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு  மனதளவில் நெருக்கடியை கொடுத்தது.

இந்த நிலையில்  241 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இதில் டேவிட் வார்னர் 7 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் 15 ரன்களிலும், ஸ்டீவ் ஸ்மித் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து மார்னஸ் லபுசேனுடன் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று ஆடி ஆஸ்திரேலிய அணியின் வெற்றியை உறுதி செய்தது. டிராவிஸ் ஹெட் 120 பந்துகளில் 137 ரன்கள் விளாசினார். இறுதியாக ஆஸ்திரேலிய அணி 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே 5 முறை உலக்கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, தற்போது 6-வது முறையாக உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது.

வெற்றி பெற்ற ஆஸ்திேரலிய அணியின் கேப்டன் கம்மின்சிடம், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய துணைப்பிரதமரும்  உலக கோப்பையை வழங்கினர். அத்துடன் வெற்றி பெற்ற அணிக்கு ரூ.33 கோடி ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.  இந்திய அணிக்கு ரூ.16.5 கோடி பரிசு வழங்கப்பட்டது.

இந்திய அணி  வெற்றி வாய்ப்பை இழந்ததும் இந்திய வீரர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக இந்தியாவின் 100 கோடி கிரிக்கெட் ரசிகர்களும் நேற்று இரவு தூங்கமுடியவில்லை. சோகத்தில் தவித்தனர்.  இந்திய  பந்து வீச்சாளர்   சிராஜ் மைதானத்தில் அழுதே விட்டார்.  கேப்டன் ரோகித்தால் பேச முடியாமல் தவித்தார். பின்னர் வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் கூறி தேற்றிக்கொண்டனர்.

9 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்ற   இந்திய அணி, இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்தது. 6 வது முறையாக சாம்பியன் ஆன  ஆஸ்திரேலியா , லீக் ஆட்டங்களில் இந்தியா, தென் ஆப்ரிக்கா  ஆகிய அணிகளிடம் தான் தோல்வி அடைந்திருந்தது. அதை ஈடுகட்டும் வகையில் அரை இறுதியில் தென் ஆப்ரிக்காவையும், இறுதிப்போட்டியில் இந்தியாவையும்  வென்று பழிதீர்த்துக்கொண்டு அனைத்து அணிகளையும் வென்ற அணி என்ற பெருமையுடன் உலக கோப்பையை வென்று% உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!