Skip to content
Home » உலக கோப்பை கிரிக்கெட்….நாளை முதல் அரையிறுதி….. வேகப்பந்து வீச்சாளர்கள் கையில் வெற்றிக்கனி

உலக கோப்பை கிரிக்கெட்….நாளை முதல் அரையிறுதி….. வேகப்பந்து வீச்சாளர்கள் கையில் வெற்றிக்கனி

  • by Senthil

இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

நாளை நடைபெறும் முதலாவது அரையிறுதி போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மும்பையிலும், நாளை மறுநாள் நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா அணிகள் கொல்கத்தாவிலும் மோத உள்ளன.

நாளை மதியம் 2 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இது நாக் அவுட் போட்டி என்பதால் இரு அணிகளுமே முதலில் பேட்டிங் செய்வதையே விரும்பும். எனவே  டாஸ் வெல்வது போட்டியின் முக்கிய அம்சம்.  அத்துடன் வான்கடே ஸ்டேடியம் மீடியமானது. இந்த மைதானம் ரன்கள் குவிக்க சாதகமாக இருக்கும்.  இரு அணிகளும் ரன் குவிப்பதில்  சளைத்தது அல்ல.

அதே நேரத்தில் இங்கு  வெற்றியை நிர்ணயிப்பது  வேகப்பந்து வீச்சாளர்களாகத்தான் இருக்கும் என  முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலர் கருத்து தெரிவித்து உள்ளனர். இந்திய அணியில் ஷமி,  சிராஜ்,  பும்ரா ஆகியோரின் வேகப்பந்து  வழக்கம் போல நாளையும் சாதிக்கும் என நம்பலாம்.  இவர்கள்  நாளையும்  தங்கள்  வேகத்தை காட்டினால்   வெற்றி எளிதாக கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அதே நேரத்தில் நியூசிலாந்து அணியிலும் போல்ட்,  சவுதி, பெர்கியூசன் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களும்  நல்ல  பார்மில் உள்ளனர்.  கடந்த உலக கோப்பை போட்டியில்    நியூசிலாந்திடம் தான் இந்தியா அரையிறுதியில் வெற்றி வாய்ப்பை இழந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது. இந்த முறை ஏற்கனவே லீக் போட்டியில் நியூசிலாந்தை, இந்தியா  வெற்றி கண்டது.

லீக்கில் முதலில் ஆடிய நியூசிலாந்து 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் எடுத்தது. சேசிங் செய்த இந்தியா 6 விக்கெட் இழந்து  48 ஓவர்களில் இலக்கை விரட்டிப்பிடித்து வெற்றிக்கனி பறித்தது.  அந்த  தெம்புடன் நாளையும் இந்திய வீரர்கள்  ஜொலிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த நிலையில் இரு அணி வீரர்களும் மும்பை வந்து விட்டனர். இன்று அவர்கள்  வான்கடே மைதானத்தில் பயிற்சி மேற்கொள்கிறார்கள்.

அரையிறுதி போட்டிகளுக்கு, போட்டி நடுவர்கள் (மேட்ச் ரெப்ரீ) மற்றும் நடுவர்களாக (அம்பயர்) யாரெல்லாம் செயல்பட உள்ளார்கள் என்பது குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி முதலாவது அரையிறுதி போட்டிக்கு ரிச்சர்ட் இல்லிங்வொர்த் மற்றும் ராட் டக்கர் கள நடுவர்களாகவும், ஜோயல் வில்சன் 3வது நடுவராகவும், அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக் 4வது நடுவராகவும், ஆண்டி பைகிராப்ட் போட்டி நடுவராகவும் (மேட்ச் ரெப்ரீ) செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல், 2வது அரையிறுதி போட்டிக்கு ரிச்சர்ட் கெட்டில்பரோ மற்றும் நிதின் மேனன் கள நடுவர்களாகவும், கிறிஸ் கேப்னி 3வது நடுவராகவும், மைக்கேல் கோப் 4வது நடுவராகவும், ஜவகல் ஸ்ரீநாத் போட்டி நடுவராகவும் (மேட்ச் ரெப்ரீ) செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!