Skip to content
Home » எக்ஸ்போசாட் செயற்கைக்கோள்….. வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது…. விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

எக்ஸ்போசாட் செயற்கைக்கோள்….. வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது…. விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

  • by Senthil

இஸ்ரோவின் எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் மூலம் இன்று (ஜனவரி 1) காலை 9.10 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து சென்றது.  அப்போது விஞ்ஞானிகள் மகிழ்ச்சி  ஆரவாரம் செய்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த மாணவ, மாணவிகளும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

விண்வெளியில் உள்ள புற ஊதாக்கதிர்கள், அங்கு பரவும் எக்ஸ்ரே கதிர்கள் இயக்கம் மற்றும் நட்சத்திரங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் அஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் 2015-ம் ஆண்டில் அனுப்பப்பட்டது. இந்த செயற்கைக்கோள் கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு அரிய தகவல்களை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக கருந்துளை, நியூட்ரான் நட்சத்திரங்கள் போன்ற வானியல் நிகழ்வுகளை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்வதற்காக எக்ஸ்போசாட் (XPoSat-X-ray Polarimeter Satellite) எனும் அதிநவீன செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது.

இந்த செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில்  உள்ள ஏவுதளத்தில் இருந்து புத்தாண்டு தினமான இன்று (ஜனவரி 1) காலை 9.10 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.  ராக்கெட் ஏவுதலுக்கான 25 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று காலை 8.10 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து ராக்கெட்டில் எரிபொருள் நிரப்புதல் உட்பட இறுதிகட்ட பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. எக்ஸ்போசாட் 469 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகளாகும்.

இது பூமியில் இருந்து சுமார் 650 கி.மீ உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட உள்ளன. இதற்காக எக்ஸ்பெக்ட் (எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ கிராபி), போலிக்ஸ் (எக்ஸ்ரே போலரி மீட்டர்) ஆகிய 2 சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவைவிண்வெளியில் பரவும் எக்ஸ்கதிர்களின் துருவ முனைப்பு அளவு மற்றும் கோணத்தை அளவிடுதல், நியூட்ரான்நட்சத்திரத்தில் இருந்து வெளிப்படும் கதிரியக்கம், கருந்துளை வாயுக்களின் நெபுலா உட்பட பல்வேறு அம்சங்களை ஆராயும். மேலும், ஒரே நேரத்தில் எக்ஸ் கதிர் மூலங்களின் நிறமாலை மற்றும் துருவப்படுத்தல் செயல்பாடுகளையும் ஆய்வு செய்ய முடியும். இந்த தரவுகள்,பிரபஞ்சத்தின் செயல்பாடு தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!