திருச்சியில் ரயிலில் செல்போன் திருடிய யூடியூபரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கூட்டாம் புளி பகுதியைச் சேர்ந்தவர் அ. அற்புதராஜ் (20). இவர் சென்னையில் நண்பரின் திருமணத்துக்கு சென்றுவிட்டு அந்தியோதயா ரயிலில் ஊருக்கு செல்வதற்காக தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறியுள்ளார். இரவு செல்போனை ரயிலில் சார்ஜ் போட்டுவிட்டு தூங்கியுள்ளார். ரயில் அதிகாலை திருச்சி ரயில் நிலையத்துக்கு வந்தபோது அவருடைய செல்போன் திருட்டுப்போனது தெரியவந்தது.
இதுகுறித்து திருச்சி இருப்புப் பாதை காவல் நிலையத்தில் அற்புதராஜ் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
அப்போது, திருச்சி ரயில் நிலையம் 1ஏ நடைமேடையில் சந்தேகப்படும் வகையில் நின்றுகொண்டிருந்த நபரைப் பிடித்து விசாரித்தனர். இதில் அவர், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த யூடியூபர் சாதிக் பாட்சா (41) என்பதும், அற்புதராஜின் செல்போனை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்தனர்.
