தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு, வருகின்ற 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரியலூர் ஆயிரம் கால் மண்டபம் அருகில், அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் சசிகலா, இன்று இரவு அவரது கட்சி வேட்பாளராக அரியலூர் சட்டமன்றத் தொகுதிக்கு போட்டியிடும் ராஜ்குமாருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் பேசுகையில், திமுக அரசு தமிழகத்தை 12 லட்சம் கோடி கடனில் வைத்துள்ளது. மக்களுக்காக அவர்கள் எதையும் செய்யவில்லை.
உங்களிடம் இருந்து வீட்டு வரி, மின்சார கட்டணம் உள்ளிட்ட பல கட்டணங்களை உயர்த்தி, உங்கள் பணத்தை எடுத்து உங்களுக்கு ஆயிரம் ரூபாயாக தருகின்றனர். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. 100 நாள் வேலை வாய்ப்பு வழங்கப்படாமல், மக்களின் பிரச்சினைகளை மறைத்து, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீங்கள் உண்மையை பேசுபவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும் 5 வருடத்தில், 6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் என்று திமுக சார்பில் தேர்தல் அறிக்கை வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லை. அம்மா ஆட்சியில் அனைவருக்கும் முறையாக சம்பளம் வழங்கப்பட்டது. தற்பொழுது ஏன் கொடுக்க முடியவில்லை என்றால், அரசின் வருமானம் வேறு எங்கோ செல்கின்றது என்று குற்றம் சாட்டினார். ஒவ்வொரு வீட்டிலும் 500 யூனிட் மின்சாரம் உபயோகப்படுத்தும் மக்கள் 2 கோடி பேர் தமிழ்நாட்டில் உள்ளனர். இவர்களிடம் இருந்து மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டு அதிலிருந்து வருடத்திற்கு கிடைக்கும் 20,000 கோடி ரூபாய் பணத்திலிருந்து உங்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கொடுக்கின்றனர். இந்த ஆயிரம் ரூபாயை வைத்து உங்களால் 30 நாள் சாப்பிட முடியுமா?. தற்பொழுது தேர்தல் அறிக்கையில் 2000 ரூபாயாக வழங்குகிறேன் என்று இரண்டு பேரும் கூறுகின்றனர். ஆனால் இவர்களால் இதை வழங்க முடியாது. தேர்தல் முடிந்தவுடன் ஆறு மாதம் தருவார்கள் அல்லது நாலரை ஆண்டுகள் கழித்து அந்த ஆறு மாதத்திற்கு உங்களுக்கு பணம் தருவார்கள். ஏனென்றால் அரசிற்கு வருவாய் இல்லை. அதனால் நிச்சயம் உங்களுக்கு இவர்களால் பணம் வழங்க முடியாது.
தற்போது உள்ள தமிழக முதலமைச்சர் பொறுப்பில்லாமல் பேசுகின்றார். நாங்கள் முதலமைச்சராக கொண்டு வந்த எடப்பாடியும் வீட்டுக்கு ஒரு பிரிட்ஜ், பத்தாயிரம் ரூபாய் பணம் என்று கூறுகின்றனர். ஆனால் இரண்டு பேரும் மக்களை ஏமாற்றி ஆசை காட்டி மோசம் செய்கின்றனர். அம்மா காலத்தில் மின்மிகை மாநிலமாக வைத்திருந்த தமிழகத்தை, பக்கத்து மாநிலங்களுக்கு மின்சாரத்தை விற்பனை செய்த நிலையை மாற்றி, இன்று தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து இவர்களுக்கு வருமானம் வர வேண்டும் என்பதற்காக ஒரு யூனிட் 25 ரூபாய் வரை இவர்கள் வாங்குகின்றனர். இது பொது மக்களுக்கு தெரியாது என்று கூறினார். மேலும் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையாக, மகப்பேறு உதவியாக 24 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். கிராமப்புற மகளிர் மேம்பாட்டிற்காக வருடத்திற்கு ஒரு லட்சம் கோழி பண்ணை, ஒரு லட்சம் ஆட்டுப்பண்ணை, ஒரு லட்சம் மாட்டுப்பண்ணை, 50 சதவீத மானியத்தில் அமைத்துக் கொடுக்கப்படும். அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும். பட்டியல்இன, பிற்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை 50 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும். நகர்ப்புற, கிராமப்புற, வீடற்ற ஏழை மக்களுக்கு 5 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும். புதிய தொழில்நுட்பத்தில் காற்றாலைகள் மற்றும் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைத்து, பத்தாயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்து தமிழகத்தை மீண்டும் மின்மிகை மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
ரேஷன் கடைகளில் ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் இலவசமாக வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை 2000 ஆக உயர்த்தப்படும். வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வந்து வேலை வாய்ப்புகளை உருவாக்கி, இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும். தமிழகத்தில் 2.5லட்சம் அரசு பணிகள் படிப்படியாக பூர்த்தி செய்யப்படும். கடைமடை வரை செல்லும் வகையில் ஏரி குளம் வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்படும். காலியாக உள்ள அங்கன்வாடி, சத்துணவு சமையலர் பணியிடங்கள் நிரப்பப்படும். கிராம மக்களுக்கு தரமான சாலைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். ஆவின் பால் லிட்டருக்கு நான்கு ரூபாய் உயர்த்தி வழங்கப்படும். 25 தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும். ஆயிரம் அம்மா உணவகங்கள் புதிதாக ஏற்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட பல திட்டங்களை தங்களது கட்சியின் தேர்தல் அறிக்கையாக வெளியிட்டார்.
மேலும் அரியலூர் மாவட்டத்திற்கு, கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அரியலூரை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இரவு நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படும். திருமானூர் தா.பளூர் பகுதிகளில் நவீன அரிசி ஆலை அமைக்கப்படும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் தானியங்களை சேமித்து வைக்க குடோன்கள் கட்டித் தரப்படும். கோடை காலங்களில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். செம்பியன் மாதேவி பேரேரி முதல் பொன்னேரி வரை தூர்வாரி, கொள்ளிடம் ஆற்றில் வீணாக கடலில் கலக்கும் நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மேலும் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தஞ்சாவூர் அரியலூர் ரயில் பாதையை அமைக்க திமுக அரசு எதையும் செய்யவில்லை. இவர்கள் எப்பொழுதும் மத்திய அரசுடன் சண்டை போடுகின்ற போக்கையே கடைப்பிடிக்கின்றனர்.
மக்களுக்கான நலத்திட்டங்கள் எதையும் மத்திய அரசிடம் இருந்து கொண்டு வரவில்லை. இந்த நிலை மாறி மக்களுக்கான நலத்திட்டங்கள் முறையாக கொண்டு சேர்க்க, நாங்கள் அறிவித்துள்ள வேட்பாளர் ராஜ்குமாருக்கு தென்னந்தோப்பு சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று சசிகலா கேட்டுக்கொண்டார்.
