Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வரதட்சணை கேட்டு புதுப்பெண்ணுக்கு தொல்லை.. கணவர் குடும்பத்தினர் மீது வழக்கு

வரதட்சணை கேட்டு புதுப்பெண்ணுக்கு தொல்லை..

திருச்சி அருகே உள்ள பி.ஹெச்.இ.எல் டவுன்ஷிப் பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (37). இவருக்கும் வையம்பட்டியைச் சேர்ந்த நிவேதா (32) என்பவருக்கும் கடந்த ஆண்டு முறைப்படி இரண்டாவது திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்குப் பிறகு இருவரும் கணவர் வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர்.
இந்த நிலையில், சிலம்பரசன் மற்றும் அவரது குடும்பத்தினர் நிவேதாவிடம் கூடுதல் வரதட்சணையாக ரூ. 5 லட்சம் ரொக்கப்பணம், 50 சவரன் தங்க நகைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களைக் கேட்டுத் தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில், கணவர் சிலம்பரசன் தனது குடும்பத்தினரின் தூண்டுதலின் பேரில் நிவேதாவை ஆபாசமாகத் திட்டி, கைகளாலும் கால்களாலும் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த நிவேதா திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பினார். இது குறித்த புகாரின் பேரில், திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கணவர் சிலம்பரசன், மாமியார் மணிமேகலை, மாமனார் ராமசாமி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


வாலிபரை கல்லால் தாக்கியவர் கைது

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள ஈசனைக்கோரை கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கப்பிள்ளை (38). இவர் கடந்த மாதம் அதே பகுதியில் உள்ள தனது சித்தப்பா வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த மித்ரன் (25) என்பவரது நாய், சங்கப்பிள்ளையைப் பார்த்து குரைத்துள்ளது.
தற்காப்பிற்காக சங்கப்பிள்ளை அங்கிருந்த ஒரு குச்சியை எடுத்து நாயை விரட்டியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மித்ரன், சங்கப்பிள்ளையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை ஆபாசமாகத் திட்டியுள்ளார். மேலும், அருகில் கிடந்த கல்லை எடுத்து சங்கப்பிள்ளையைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
தலை மற்றும் உடலில் காயமடைந்த சங்கப்பிள்ளை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது தொடர்பாக சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மித்ரனை கைது செய்தனர்.


மோட்டார் சைக்கிள்கள் மோதி முதியவர் பலி

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா பேரமங்கலம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி (60). இவர் தனது மோட்டார் சைக்கிளில் திருச்சி – துறையூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். புலிவலம் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது, எதிரே நவீன் (20) என்பவர் ஓட்டி வந்த கே.டி.எம் பைக், கந்தசாமியின் வாகனத்தின் மீது அதிவேகமாக மோதியது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த கந்தசாமி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். விபத்தில் காயமடைந்த நவீன் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கந்தசாமியின் மகன் முருகேசன் புலிவலம் போலீசில் புகார் அளித்தார் அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!