கந்து வட்டி கொடுமையால் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பட்டதாரி கல்லூரி மாணவி தற்கொலை – கடன் கொடுத்தவர்கள் மீது தந்தை காவல் நிலையத்தில் புகார்.
கரூர் மாவட்டம், சாலப்பாளையம் ஜெயந்தி நகர் பகுதியைச் சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளி கந்தசாமி, குடும்பச் செலவுக்காக விஸ்வாந்தபுரியைச் சேர்ந்தவர்களிடம் ரூ.1 லட்சத்து 54 ஆயிரம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.
குடும்ப சூழ்நிலை காரணமாக கடனை முழுமையாக திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், வாங்கிய தொகையைவிட கூடுதல் பணம் செலுத்திய பிறகும் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி கந்தசாமியின் வீட்டிற்கு வந்த கடன் கொடுத்த நபர், கந்தசாமியையும் அவரது மகள் கலைவாணியையும் பொதுமக்கள் முன்னிலையில் ஆபாச மற்றும் தகாத வார்த்தைகளால் திட்டி, கடனை திருப்பிச் செலுத்துமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான 23 வயதான கலைவாணி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இன்று காலை தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தகவலறிந்த குடும்பத்தினர் அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
மகள் கலைவாணியின் மரணத்திற்கு கடன் கொடுத்த நபரின் மிரட்டலும் தகாத பேச்சுமே காரணம் என குற்றம்சாட்டிய கந்தசாமி, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி க.பரமத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும், அபிமன்யூ என்பவரிடம் ரூ.50 ஆயிரம் கடன் பெற்று மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் வட்டி செலுத்தி வந்ததாகவும், நாகராஜிடம் ரூ.75 ஆயிரம், தங்கராஜிடம் ரூ.20 ஆயிரம், செல்வி என்பவரிடம் ரூ.40 ஆயிரம் கடன் பெற்றிருந்ததாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடன் மற்றும் வட்டி தொடர்பான விவரங்கள், மிரட்டல் குற்றச்சாட்டு உள்ளிட்டவை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, உயிரிழந்த கலைவாணிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், இன்னும் ஆறு மாதங்களில் திருமணம் நடைபெற இருந்ததாக கூறப்படுகிறது.
திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்னும் ஆறு மாதத்தில் திருமணம் நடைபெற இருந்த இளம் கல்லூரி மாணவி கந்து வட்டி கொடுமையால் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கந்துவட்டி பிரச்சனை காரணமாக கரூரில் பல்வேறு நபர்கள் இதுபோன்ற மன உளைச்சலுக்கு உள்ளாகவதாகவும் அதனை காவல்துறையினர் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
