சென்னை அயனாவூர் பகுதியில் மூன்று வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அயனாவூர் பகுதியில் உள்ள ஒரு கடையில் தம்பதியினர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு குழந்தைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பெற்றோர் குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, பெற்றோர் நடத்திய விசாரணையில், அதே பகுதியில் உள்ள மற்றொரு கடையில் வேலை செய்து வரும் 17 வயது சிறுவன் குழந்தையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகத் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பெற்றோர் அயனாவூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, சம்பந்தப்பட்ட சிறுவனிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், குழந்தையிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட மூன்று வயது குழந்தை தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. சென்னையில் மூன்று வயது குழந்தைக்கு நேர்ந்த இந்தக் கொடூரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
