கரூர் புதிய பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் பேருந்து செல்லும் ஒரு புறம் சாலையை ஆக்கிரமித்து அதில் வாகனங்களை நிறுத்துவதாக புகார்! அரசு உறுதிமொழி குழு நேரில் ஆய்வு செய்து அதிகாரிகள் விளக்கம் அளிக்க உத்தரவு.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக் குழுவின் 2026–27 ஆம் ஆண்டிற்கான ஆய்வுப் பணியின் ஒரு பகுதியாக, குழுத் தலைவர் விஜய் சரவணன் தலைமையில் 12

உறுப்பினர்கள் கொண்ட குழுவினர் இன்று கரூர் மாவட்டத்தில் பல்வேறு திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதன் ஒரு பகுதியாக, கரூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதலாகப் பணம் வசூலிக்கப்படுவதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட வாகன நிறுத்துமிடத்திற்குச் சென்ற குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது, வாகன நிறுத்துமிடத்திற்காக ஒதுக்கப்பட்ட பகுதியைத் தாண்டி, பேருந்து செல்லும் ஒருபுறம் சாலையை மொத்தமாக ஆக்கிரமிப்பு செய்து கம்பி வேலி அமைக்கப்பட்டு, கூடுதல் இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுவதாகத் தெரியவந்தது.
மேலும், இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது எனக் குழுவினர் கேட்டறிந்தபோது, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து, வாகன நிறுத்துமிடத்திற்கான டெண்டர் விவரங்கள் மற்றும் கட்டணம் வசூலிப்பதற்கான அனுமதி தொடர்பான முழுமையான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அரசு உறுதிமொழிக் குழுவினர் உத்தரவிட்டனர்.
அதேபோல், வாகன நிறுத்துமிடத்தைச் சுற்றிலும் கம்பி வேலி அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளதா? இதற்காக அரசு சார்பில் முறையான அனுமதி வழங்கப்பட்டுள்ளதா? இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தால், கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு எப்போது அனுமதி பெறப்பட்டது? என்பது குறித்தும் விளக்கமான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.
கரூர் புதிய பேருந்து நிலையத்தில் வாகன நிறுத்துமிடத்தைத் தாண்டி கூடுதல் இடங்கள் பயன்படுத்தப்படுவதாக எழுந்த புகாரும், அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அரசு ஒதுக்கிய இடத்தைத் தாண்டி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா? அல்லது கூடுதல் இடங்களைப் பயன்படுத்துவதற்கு முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா? என்பது அதிகாரிகள் அளிக்கும் அறிக்கை மற்றும் அடுத்தகட்ட விசாரணைக்குப் பின்னரே தெரியவரும்..
