தூத்துக்குடியில் 17 வயது சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பாலியல் தொல்லை அளித்த கடை ஊழியர் மீது அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி, முத்தையாபுரம், எம். தங்கம்மாள்புரத்தைச் சேர்ந்த அந்தோணிராஜ் மகன் முத்துராஜ் (22). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் தூத்துக்குடியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருடன் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் மூலம் பழகி வந்துள்ளார்.
இந்நிலையில், மெசெஞ்சர் மூலம் அச்சிறுமிக்குத் தொடர்ந்து ஆபாச மெசேஜ்களை அனுப்பி வந்துள்ளார். மேலும், சிறுமியுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஐடியில் பகிர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
இதை அறிந்துகொண்ட சிறுமியின் தாயார், முத்துராஜிடம் சென்று தட்டிக்கேட்டுள்ளார். அதற்கு முத்துராஜ், சிறுமியின் தாயாருக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்துச் சிறுமியின் தாயார் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், முத்துராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்
